Periyar : அறிவை தடுப்பாரை மண்ணோடு பெயர்த்த கடப்பாரை : ஏன் அவர் பெரியார்?
பெரியார் கற்பனை செய்த ' சுய மரியாதைக்காரி' வரலாற்றுக்கு அப்பாற்பட்டவள். சுதந்திரமானவள், முன்னோர்களின் தொடர்ச்சியான தொடர்புகளைத் துண்டிக்க தயங்காதாவள்
தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. முன்னதாக, இந்த அறிவிப்பு குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ அடித்தளம் அமைத்தவர் பெரியார். அவர் எழுதிய எழுத்துகள், பேசிய பேச்சுகள் எல்லாம் யாருமே எழுத, பேச தயங்கியவை ஆகும். பெரியாரின் போராட்டங்கள் குறித்து பேசுவது என்றால் அவையை 10 நாட்கள் ஒத்திவைத்துவிட்டுத்தான் பேச வேண்டும். பெரியாரின் குருகுல பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது” என்றார்.
தேசியவாதம் என்பது ஐரோப்பாவில் உருவான ஒரு அண்மைக்காலத் தோற்றப்பாடு என்பதை sudipta kaviraj, partha Chatterjee உள்ளிட்ட பல அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். தனது பாரம்பரிய இறந்த காலத்தை மீட்டெடுக்கும் முயற்சியாகவே தேசியவாதம் பார்க்கப்படுகிறது. தேசம் என்பது முன்னோர்களின், இடையறாத, தொடர்ச்சியான தொடர்புகளையும், வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதிற்கு உதவுகிறது.
ஆனால், பெரியாரின் முன்னெடுத்த திராவிட இயக்கம் இதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. தொடர்ச்சியான கலாச்சார பாரம்பரியத்தை நினைவு கூறுவதினால் இந்திய தேசியம் தொடங்கினால், ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்கு வாய்ப்பளிக்காத கடந்த காலங்களை மறப்பதில் இருந்து தான் பெரியாரின் அரசியல் தொடங்குகிறது. தென்னகத்தில் மட்டுமல்ல உலகளவில் கூட இந்த போக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
பெரியார் உருவாக்கிய சமூகநீதி: 1919-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்த அவர், கிலாபத் இயக்கம், மது குடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியல் ஆகிய முக்கிய போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இருந்தாலும்,1925-இல் பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக நேரிட்டது. இதற்கான காரணங்களை பகுப்பாய்வு செய்தால் தான் பெரியார் உருவாக்கிய சமூநீதியை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
முதலாவதாக, பொது மக்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிதியுதவியுடன் சேரன்மாதேவியில், வ.வே.சு ஐயர் என்கிற தேச பக்தர், காந்திய நெறிமுறைப்படி குருகுலம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த குருகுலத்தில் பிராமண மாணவர்களுக்கு அறுசுவை உணவும், பிரமணரல்லாத மாணவர்களுக்கு சாதாரண உணவும் வழங்கப்பட்டது. தண்ணீர்ப் பானையும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
இரண்டாவதாக, அரசுப் பணிகளிலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக் காங்கிரஸ் கட்சி வரவேற்கவில்லை. ஒரே தேசியத்தில் மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் இடஒத்துக்கீடு தேவையற்றது என்று காங்கிரஸ் கட்சி கருதியது.
மூன்றாவதாக, பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், இந்து அறநிலையத் துறை சட்டங்களை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக எதிர்க்கத் தொடங்கினர். குறிப்பாக, தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம் மற்றும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு தமிழ்நாட்டில் காணப்பட்டது. தேசத்தின் பாரம்பரிய மரபில் வேற்று நாட்டு அரசு தலையிடக் கூடாது என்பது அவர்களது வாதமாக அமைந்தது.
சுதந்திற்கு முந்தைய இந்தியாவில் கற்பனை செய்யப்பட்ட தேசிய கட்டமைப்பில் பெரும்பாலும் உயர் வகுப்பினரின் பங்கு முக்கியத்தும் பெற்றது. பூனை, எலியை விடுதலை செய்ததாக வரலாறு உண்டா? முதலாளி தொழிலாளிக்கு விடுதலை வழங்கியிருக்கிறானா? என்பதற்கு ஒப்பானதுதான் ஆங்கிலேய ஆட்சிக்குப் பிறகு சிதந்திர இந்தியாவில் ஒடுக்கப்பட்ட விளம்புநிலை மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என நம்புவது என்றார் பெரியார்.
அதே காரணத்திற்காகத் தான், தமிழில் உருவாக்கப்பட்ட சிறந்த இலக்கிய படைப்புகள் மீதும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். சிலப்பதிகாரத்தில் கண்ணகி கற்பரசி, பத்தினிப் பெண் என்கிற கருத்தியல் பெரியாரைக் சினங்கொள்ளச் செய்தது. சமூக உண்மைகளை ஏற்க மறுத்த எந்தவொரு கருத்தியலையும், படைப்புகளையும் பெரியார் உதறித் தள்ளினார்.
பெரியாரின் சிந்தனைகள் நிலப்பரப்பை முதன்மைபடுத்தவில்லை. பொதுவாக, திராவிட இயக்கம் என்பது நிலப்பரப்பு சார்ந்த இனவாத அரசியல் (Regional Chauvinism) என்றளவே புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால், திராவிடம் என்பதே கற்பனையான அரசியல் எல்லை (Imagined Political Boundary). விளிம்பு நிலை மக்களுக்கான அடிப்படை அரசியல். திராவிட அரசியல் தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அதை தமிழ்நாடு சரியாக புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டுவிட்டது. திராவிடம் என்பது ஆதிக்கத்துக்கு எதிரான ஒரு உணர்வு. ஒருவகையான அரசியல் செயல்முறை.
பெரியார் கற்பனை செய்த ' சுய மரியாதைக்காரி' வரலாற்றுக்கு அப்பாற்பட்டவள். சுதந்திரமானவள், முன்னோர்களின் தொடர்ச்சியான தொடர்புகளைத் துண்டிக்க தயங்காதவள். மனித உண்மைகளை பிரதிபலிக்காத கலாச்சார பாரம்பரியத்தை துடைத்தெறிபவள். வாசிப்பவள், வாசித்ததை மறுவாசிப்பு செய்பவள். மறைக்கத் தெரிந்தவள், மறுக்கத் தெரிந்தவள். கையாள முடிந்த கூறுகளுக்கு,கையாள முடியாத கூறுகளுக்கும் இடையே உள்ள உறவைக் கட்டவிழ்ப்பு (Deconstruction) வாசிப்பு மூலம் கண்டறிபவள். வெளிப்படையாகத் தெரியாதனவற்றை பொது பார்வைக்கு கொண்டுவரும் ஆசிரியை.