Senthil Balaji: ‘முழுக்க முழுக்க மனித உரிமை மீறிய செயல்’.. செந்தில்பாலாஜி கைதுக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்..!
அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ள சம்பவத்திற்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ள சம்பவத்திற்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசில் மின்சாரத்துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். இதேபோல் கரூரில் உள்ள செந்தில்பாலாஜி வீடு உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடைபெற்றது. தொடர்ந்து தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனையானது நடைபெற்றது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல மாநில, தேசிய கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து 17 மணி நேரம் நீடித்த சோதனையானது நள்ளிரவில் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து செந்தில் பாலாஜியை அதிகாரிகள் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது நெஞ்சுவலிப்பதாக கூறிய அவர், உடனடியாக ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரில் நெஞ்சு வலியால் கதறி அழுத அமைச்சர் செந்தில் பாலாஜி வீடியோ வைரலானது. அவரைக் காண அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, கே.என்.நேரு, ரகுபதி,எ.வ.வேலு, திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ என பலரும் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “இந்த சம்பவம் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கம். இதற்கு காரணமானவர்கள் நிச்சயம் மக்கள் மன்றத்தில் பதில் சொல்வார்கள். நாம் ஜனநாயக நாட்டில் தான் இருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. ஒருவர் கைது செய்யப்பட்டாலோ அல்லது விசாரிக்கப்பட்டாலோ அதுகுறித்து உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் அமைச்சர் கைது செய்யப்பட்டதோ, மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதோ குறித்தோ தெரிவிக்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க மனித உரிமை மீறிய செயல் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய திமுக எம்.பி., என்.ஆர்.இளங்கோ, “அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் எந்த வழக்கில் கைது செய்துள்ளனர் என தெரியவில்லை. கைது நடவடிக்கையில் சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் செந்தில் பாலாஜி இருப்பதால் முன் ஜாமீன் தாக்கல் செய்ய முடியாது. மருத்துவ பரிசோதனைக்குப் பிறகே அவரது உடல்நிலை குறித்த தகவல் தெரியவரும்” என கூறியுள்ளார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை சந்திக்கச் சென்ற என்.ஆர்.இளங்கோ உள்ளிட்ட யாரையும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே செந்தில்பாலாஜி கைது நடவடிக்கைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் குவிந்து வருவதால் அங்கு மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.