ABP EXCLUSIVE : திமுக கொடி கட்டும்போது சிறுவன் உயிரிழந்த சம்பவம்- ஒப்பந்ததாரர் வெங்கடேசன் கைது
திமுக கொடி கட்டும்போது உயிரிழந்த சிறுவன் வழக்கில் வெங்கடேசன் என்பவருக்கு காவல்துறை சம்மன் அனுப்பட்டதாக ஏபிபி நாடுக்கு விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா தெரிவித்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்
விழுப்புரம் – மாம்பலம்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் பொன்குமார் என்பவரது இல்லத் திருமணம் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது. இந்த திருமண விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை வரவேற்பதற்காக வழிநெடுகிலும் பேனர்களும், திமுக கொடிகளும் கட்டும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இதே கொடி கம்பம் நடும் பணியில் விழுப்புரம் ரஹூம் லே அவுட் பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் என்பவரது இளைய மகனான 13 வயதே ஆன, பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் தினேஷ் என்ற சிறுவனும் சட்ட விரோதமாக இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.
மின் பகிர்மான கழகத்தின் அருகே கொடி கம்பம் நட்டபோது, கொடி கம்பத்தின் இரும்பு கம்பியானது உயர் அழுத்த மின் கம்பியில் பட்டு, அதன்மூலம் சிறுவன் தினேஷ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளான். அருகே இருந்தவர்கள் தினேஷை மருத்துவமனை கொண்டு போய் சேர்த்தும், சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிமுக ஆட்சியில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்தபோது சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திமுக வலியுறுத்திய நிலையில் தற்போது திமுக ஆட்சியில் நடந்த இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை இதுவரை ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்வி சமூகவலைத்தளங்களில் முன் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து சிறுவன் உயிரிழந்த வழக்கில் வெங்கடேசன் என்பவருக்கு காவல்துறை சம்மன் அனுப்பப்பட்டதாக ஏபிபி நாடு நிறுவனத்திற்கு விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா தகவல் தெரிவித்துள்ளார்
13 வயது சிறுவன் தினேஷ் உயிரிழந்தது தொடர்பாக தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் சோகமும் நடந்துவிடுகிறது. விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி இளம் வயதான தினேஷ் மரணம் அடைந்திருப்பது எனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களைப் பலமுறை கண்டித்த பின்னும் இதுபோன்ற விரும்பத்தகாத - கண்டிக்கத்தக்க செயல்கள் தொடர்வது என்னை வருத்தமடைய வைக்கிறது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கழகத்தினர் என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்தக் கோருகிறேன்.
13 வயதே ஆன தினேஷை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அவரது குடும்பத்தாரின் துயரில் பங்கேற்று, துணைநிற்கிறேன். இனி, இதுபோன்றவை நடக்காமல் தடுப்பதே உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்!" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சிறுவன் இறந்து 4 நாட்களாகியும் இச்சம்பவத்திற்கு காரணமான நபர்களை கைது செய்யாமல் இருந்த நிலையில் சிறுவன் தினேஷை குழந்தை தொழிலாளியாக அழைத்துச் சென்ற வெங்கடேசன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
MK Stalin Statement : என்னை கஷ்ட படுத்திட்டீங்க..கலங்கிய முதல்வர் ஸ்டாலின் !