திண்டிவனத்தில் விசிக - பாமக திடீர் மோதல்... என்ன நடந்தது?
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்லம் முன்பாக விசிக கொடி வைத்து நடனமாடியதால் மோதல் ஏற்பட்டது.

விழுப்புரம்: திண்டிவனத்தில் மயானக் கொள்ளை ஊர்வலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்லம் முன்பாக விசிக கொடி வைத்து நடனமாடியதால் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - செஞ்சி சாலையில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மயான கொள்ளை திருவிழா, ஆண்டுதோறும் மாசி மாதத்தில் கோலாகலமாக நடைபெறும். அந்தவகையில், இந்தாண்டு மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக அம்மன், காளி வேடம் அணிந்து அங்காளம்மன் கோயிலிலிருந்து ஊர்வலமாக சென்றனர்.
இதில் திண்டிவனம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று, மயான கொள்ளை நிகழ்ச்சி நடக்கும் இடத்தை அடைந்தனர். இந்நிலையில், அப்போது ஊர்வலமாகச் சென்ற போது காமாட்சி அம்மன் கோயில் வீதியில் உள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வீட்டின் அருகே சென்ற விசிகவினர் சிலர், அக்கட்சியின் கொடியைக் கட்டிக்கொண்டு நடனம் ஆடியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கிருந்த பாமகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசிகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே அப்போது திடீரென மோதல் ஏற்படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பினரும் மாறி மாறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திண்டிவனத்தில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.




















