Tamil Nadu on Coronavirus :முதல்வர் நிவாரண நிதிக்கு பா.ம.க. எம்.எல்.ஏ., எம்.பி.க்களின் ஒரு மாத சம்பளம் நன்கொடை - ராமதாஸ் அறிவிப்பு..
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் மற்றும் எம்.பி. அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குவார்கள் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் கொரோனாவால் தினசரி 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதும், நூற்றுக்கணக்கானோர் தினசரி கொரோனாவால் உயிரிழப்பதும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலின் முதல் அலையை காட்டிலும், இரண்டாம் அலையின் பரவல் கோரத்தாண்டவம் இந்தியா முழுவதும் மிகுந்த கவலையளிக்கும் விதமாக உள்ளது. இதனால், அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் புதியதாக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் போன்ற தடுப்பு மருந்துகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இதுதவிர, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் வரும் 24-ஆம் தேதி வரை போக்குவரத்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டு, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தொழிலதிபர்களும், முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதியை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பலரும் தங்களால் இயன்ற நிதியை நன்கொடையாக அளித்து வருகின்றனர். இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கும்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அதையேற்று, பா.ம.க. சார்பில் அதன் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் மற்றும் 5 சட்டசபை உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக வழங்குவார்கள் என தெரிவிக்கிறேன்.தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக திரட்டப்படும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வசதிபடைத்த அனைவரும் தாராளமாக நன்கொடை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க. போட்டியிட்டது. 23 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க. 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி பெண்ணாகரம் தொகுதியிலும், மயிலம் தொகுதியில் சிவகுமாரும், மேட்டூர் தொகுதியில் சதாசிவமும், சேலம் மேற்கு தொகுதியில் ஆர். அருளும், தர்மபுரியில் எஸ்.பி.வெங்கடேஸ்வரனும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்று உள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ம.க. இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.