PMK Founder Ramadoss Thought: ‛சமூகநீதி பயணத்தில் இது வெற்றி ஆண்டு’ -டாக்டர் ராமதாஸ்
பெரியாரின் பிறந்தநாளும் நமது இட ஒதுக்கீட்டுப் போராட்ட ஈகியர்களின் நினைவு நாளுமான செப்டம்பர் 17-ஆம் நாள் சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறேன்.
சமூகநீதி பயணத்தில் இது வெற்றி ஆண்டு என்றும், வீரத் தியாகிகளுக்கு மரியாதை செய்வோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே...!
தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வீழ்த்தப்பட்டுக் கிடந்த வன்னியர் சமுதாயத்திற்கு சமூக நீதியை வென்றெடுத்துக் கொடுப்பதற்காக நடத்தப்பட்ட உரிமைப் போராட்டத்தில் 21 ஈகியர்கள் துப்பாக்கிகளால் சுடப்பட்டும், கொடூரமாக தாக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டு வரும் 17-ஆம் தேதியுடன் 24 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. சமூகநீதி வரலாற்றில் அவர்களின் தியாகம் ஈடு இணையற்றது; போற்றத்தக்கது. உயிர்த்தியாகம் செய்த 21 வீரத்தியாகிகளுக்கும் நான் வீர வணக்கம் செலுத்துகிறேன்.
இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் 1980-ஆம் ஆண்டில் தொடங்கி 1989-ஆம் ஆண்டு வரை நாம் நடத்திய வன்னியர் தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டத்துக்கு இணையாக எந்தப் போராட்டத்தையும் ஒப்பிட்டுக் கூற முடியாது. வன்னியர் சமுதாயத்தை கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத சமுதாயம் என்று கூட கூற முடியாது. பெரும்பான்மையான வன்னிய மக்கள் கல்வியின் வாசத்தைக் கூட அறியாதவர்களாக, கையெழுத்துக் கூட போடுவதற்கு தெரியாமல் கைரேகை வைக்கும் நிலையில் தான் இருந்தனர். ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் உணவு படைக்கும் அளவுக்கு விவசாயத்தை செய்து வருவது வன்னியர்கள் தான் என்றாலும் கூட, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அவர்கள் ஒடுக்கியே வைக்கப்பட்டு இருந்தனர். அந்நிலையிலிருந்து அவர்களை மீட்கவே வன்னியர் இட ஒதுக்கீடுப் போராட்டத்தைத் தொடங்கினோம்.
வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நமது கோரிக்கையில் உள்ள நியாயத்தை அரசுக்கு உணர்த்துவதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் பயனில்லாத நிலையில் தான் 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 17&ஆம் நாள் தந்தை பெரியாரின் பிறந்த நாளில் ஒரு வார கால தொடர் சாலை மறியல் போராட்டத்தைத் தொடங்கினோம். நமது போராட்டம் வெற்றி பெற்று விடக் கூடாது என்ற எண்ணத்தில் அடக்குமுறைகளை காவல்துறை கட்டவிழ்த்து விட்டது. ஒரு கட்டத்தில் காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமானத் துப்பாக்கிச் சூடு, அதைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய கொடியத் தாக்குதல்களில் பாட்டாளி சொந்தங்கள் 21 பேர் தங்களின் இன்னுயிரை ஈந்தனர்.
பார்ப்பனப்பட்டு ரெங்கநாதக் கவுண்டர், சித்தணி ஏழுமலை, ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம், சிறுதொண்டமாதேவி தேசிங்கு, தொடர்ந்தனூர் வேலு, கயத்தூர் தாண்டவராயன், பார்ப்பனப்பட்டு வீரப்பன், பேரங்கியூர் அண்ணாமலைக் கவுண்டர், அமர்த்தானூர் மயில்சாமி, குருவிமலை முனுசாமி நாயகர், சிவதாபுரம் குப்புசாமி, கொழப்பலூர் முனுசாமி கவுண்டர், வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன், மொசரவாக்கம் கோவிந்தராஜ் நாயகர், கடமலைப்புத்தூர் மணி, புலவனூர் ஜெயவேல் பத்தர் ஆகிய 21 பாட்டாளிகளும் செய்த தியாகம் ஈடு இணையற்றது. அவர்களுக்குப் பிறகும் பலர் நமது சமூகநீதிப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகம் என்ற உரம் தான் நமது சமூகநீதிப் போராட்டத்தை தழைக்க வைக்கிறது. அவர்களையும், அவர்கள் செய்த தியாகங்களையும் நாம் இன்று மட்டுமின்றி, என்றும் போற்ற வேண்டும்.
21 உயிர்களைத் தியாகம் செய்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டை நாம் தான் பெற்றுக் கொடுத்தோம் என்றாலும், அதில் நமக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்காத அளவுக்கு அதன் பயன்களை மற்றவர்களே அனுபவித்தனர். அதனால் ஏற்பட்ட சமூக அநீதிக்கு எதிராகத் தான் வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள், ‘‘சுக்கா.... மிளகா.... சமூகநீதி?’’ நூல் வெளியீட்டு விழாவில் வலியுறுத்தினேன். அதைத் தொடர்ந்து போராட்டத்திற்கான செயல்திட்டங்களை வகுத்தோம்; 6 கட்டங்களாக தலைநகர் சென்னையில் தொடங்கி கிராமப்பகுதிகள் வரை அறப்போராட்டங்களை நடத்தினோம். பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் நாம் நடத்திய ஆறு கட்ட போராட்டங்கள் வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்ட வரலாற்றில் முக்கியத் திருப்பு முனையாகும்.
அந்தப் போராட்டத்திற்குப் பிறகு தான் தமிழக அரசு நம்மை அழைத்துப் பேசியது. அதன் நிறைவில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்புச் சட்டத்தை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றியது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் கூட, மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்ததுடன், அதற்குத் தேவையான அரசாணைகளையும் பிறப்பித்திருக்கிறது. அரசு வேலைவாய்ப்புகளில் 10.50% இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்திலும் நேற்று முன்நாள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 10.50% இட ஒதுக்கீடு முழுமையாக செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் அனைத்துக் கல்வி நிறுவன மாணவர் சேர்க்கையிலும் 10.50% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து விட்டது. விரைவில் நடைபெறவிருக்கும் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையிலும் வன்னியர் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும். மொத்தம் 6000 இடங்கள் நிரப்பப்பட்டால் அதில் 630-க்கும் கூடுதலான இடங்கள் நமது மாணவர்களுக்கு கிடைக்கும். ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் அறிவித்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான போட்டித் தேர்வில் 10.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பனியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 3 வகையான போட்டித் தேர்வுகளில் 10.50% இட ஒதுக்கீடு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இனி நடைபெறவுள்ள அரசுப் பணியாளர் நியமனங்களாக இருந்தாலும், மாணவர் சேர்க்கையாக இருந்தாலும் நமக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்காது. இதுவரை இல்லாத சூழல் இதுவாகும். இந்த நிலையை ஏற்படுத்துவதற்காகத் தான் இவ்வளவு நாள் போராடினோம். சமூகநீதியில் நாம் சென்றடைய வேண்டிய தொலைவு இன்னும் அதிகம் என்றாலும் கூட, இப்போது வரை நாம் அடைந்திருக்கும் இலக்குகள் நமது ஈகியர்களின் ஆன்மாக்களை அமைதிப்படுத்தியிருக்கும் என நம்புவோம்.
இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் தியாகம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறேன். தந்தை பெரியாரின் பிறந்தநாளும் நமது இட ஒதுக்கீட்டுப் போராட்ட ஈகியர்களின் நினைவு நாளுமான செப்டம்பர் 17-ஆம் நாள் சமூகநீதி நாளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறேன். அவை இரண்டுமே இப்போது சாத்தியமாகியுள்ளன.
கடந்த ஆண்டு இதே நாளில் கனவாக இருந்த இந்த விஷயங்கள் இப்போது நனவாகியுள்ளன. கடந்த ஆண்டில் வேதனையுடன் பேசிய பல விஷயங்களை இப்போது மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. இந்த வகையில் நடப்பு சமூகநீதி ஆண்டு நமக்கு மிகவும் முக்கியமானது ஆகும். இதை சாத்தியமாக்கியுள்ள முன்னாள், இந்நாள் ஆட்சியாளர்களுக்கும், 6 கட்டங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்திய பாட்டாளி சொந்தங்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இலக்கை எட்ட வேண்டும் என்பதற்கான போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த நமது தியாகிகளுக்கு சமூகநீதி நாளான செப்டம்பர் 17&ஆம் நாளில் அனைவரும் அவர்களின் நினைவுத் தூண்களுக்கும், உருவப்படங்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும்; அனைவரும் அவர்களின் வீட்டு முன்பு இட ஒதுக்கீட்டுப் போராட்டத் தியாகிகளுக்கு வீரவணக்கம் என்ற பதாகையை அமைத்து அவர்களை நினைவு கூற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.