பாமகவில் பரபரப்பு: சமூக நீதி பேரவை தலைவர் மாற்றம்! ராமதாஸ் அதிரடி
பாமகவின் சமூக நீதி பேரவை தலைவராக இருந்த வழக்கறிஞர் பாலுவை நீக்கிவிட்டு கோபு என்பவரை நியமனம் செய்தார் மருத்துவர் ராமதாஸ்

விழுப்புரம்: பாமகவின் சமூக நீதி பேரவை தலைவராக இருந்த வழக்கறிஞர் பாலுவை நீக்கிவிட்டு அப்பேரவையின் தலைவராக கோபு என்பவரை மருத்துவர் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார்.
சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலுவை நீக்கம்
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிற நிலையில் ஒரு புறம் ராமதாஸ் மாவட்ட நீர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வரும் நிலையில் மறுபுறம் நீக்கப்பட்டவர்கள் தொடர்வார்கள் என அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் பாமகவின் மாநில பொருளாளர் திலகபாமா நீக்கப்பட்டு சையத் மன்சூர் நியமனம் செய்து ராமதாஸ் உத்தரவிட்டிருந்தார். அதன்பின் இன்றைய தினம் பாமக மாநில துணை தலைவராக முன்னாள் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் ரவிராஜ் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ள 34 அமைப்புகளில் சமூக நீதி பேரவை அமைப்பு செயல்பட்டு வருகிறது, இந்த அமைப்பின் மாநில தலைவராக இருந்த பாமக வழக்கறிஞர் பாலுவை நீக்கிவிட்டு வழக்கறிஞர் வி.எஸ் கோபு என்பவரை நியமித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
வழக்கறிஞர் வி.எஸ் கோபு செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்., சமூக நீதி பேரவை தலைவர் பொறுப்பினை பெற்றுவந்த வழக்கறிஞர் கோபு பாலு செய்யாமல் விட்ட அனைத்து பணிகளையும் பாமகவில் செய்ய உள்ளதாகவும் பாமகவில் நிறுவனர் ராமதாஸ் நியமிக்கும் பொறுப்புகள் தான் செல்லும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாசை செயல்தலைவராக நியமித்து ராமதாஸ் அறிவித்தார். அவர் அறிவித்த பொறுப்பிலையே அன்புமணி ராமதாசை பார்ப்பதாக புதியதாக நியமிக்கப்பட்ட கோபு தெரிவித்தார்.
மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மாற்றம்
கட்சியின் மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர்களை ராமதாஸ் நீக்கி வந்தாலும் அன்புமணி ஒரு புறம் நீடிப்பார் என அறிக்கைகள் வெளியிடுவதும் தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே 35 மாவட்ட செயலாளர்கள், 16 மாவட்ட தலைவர்கள், பொருளாளார் ஒருவர் நீக்கப்பட்டு இருந்தனர். மூன்று தினங்கள் நிர்வாகிகளை சந்திக்காமல் சென்னை சென்று தைலாபுரம் வந்த ராமதாஸ் மீண்டும் கட்சி நிர்வாகிகளை மாற்றி நியமனம் செய்து வருகிறார். இன்றைய தினம் மட்டும் திருவண்ணாமலை மாவட்ட செயலாளராக பவுன்குமார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக தாஸ் என்பவரும், மாநில துணை தலைவராக முன்னாள் திருத்தனி சட்டமன்ற உறுப்பினர் ரவி ராஜ் என்பவரை நியமனம் செய்து ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட செயலாளர்கள் 37 பேர் மாற்றம்
மாவட்ட செயலாளர்கள் 37 பேர் இதுவரை மாற்றம் செய்யபட்டுள்ளனர். திருவண்ணாமலை மேற்கு மாவட்ட தலைவராக சுமன் என்பவரும் கடலூர் வடக்கு மாவட்ட தலைவராக கதிரவன என்பவர் நியமனம் செய்யப்பட்டுளனர். இதுவரை 17 மாவட்ட தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதே போன்று கடலூர் கிழக்கு மாவட்டம் வடக்கு மாநகர தலைவராக முருகானந்தம் என்பவரும், கடலூர் கிழக்கு மாவட்ட பேரூர் தலைவராக அருண் ராஜ் என்பவரும், கடலூர் கிழக்கு மாவட்ட மேற்கு மாநகர செயலாளராக சிலம்பரசன் என்பவரும், கடலூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக விஜய் என்பவரும், கடலூர் கிழக்கு மாவட்ட வடக்கு மாநகர செயலாளராக ஆனந்து என்பவரும், கடலூர் கிழக்கு மாவட்டம் கிழக்கு மாநகர செயலாளராக அருள் என்பவரும் கடலூர் கிழக்கு மாவட்டம் கிழக்கு ஒன்றிய தலைவராக லோகநாதன் என்பவரும், கடலூர் கிழக்கு மாவட்டம் தெற்கு ஒன்றிய துணை தலைவராக சிவாவை நியமனம் செய்து கடலூர் மாவட்டத்தில் கூண்டாக மாற்றம் செய்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.





















