PM Modi Speech : “என்னுடைய சாதனையை நானே முறியடிக்கிறேன்” - மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழாவில் பிரதமர் பெருமிதம்
தமிழ்நாட்டின் அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவ திட்டங்களுக்கு ரூபாய் 300 கோடி ஒதுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதியதாக கட்டப்பட்டு வந்த 11 மருத்துவ கல்லூரிகள் இன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா தொற்று உள்ளிட்ட சில காரணங்களால் பிரதமர் மோடி நேரடியாக இந்த விழாவில் பங்கேற்க இயலாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, காணொலி காட்சி மூலமாக திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய 11 அரசு மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி சற்றுமுன் திறந்து வைத்தார்.
இந்த புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்து பிரதமர் மோடி தமிழக மக்களுக்கு தமிழில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பொங்கல் வாழ்த்து கூறினார். அவர் பேசியதாவது,
“ தை பிறந்தால் வழி பிறக்கும். தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகள். மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் தமிழ்நாட்டில் 11 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2014ம் ஆண்டில் 317 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 596 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ படிப்புகளை ஊக்கப்படுத்த மத்தியில் இருந்த முந்தைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு மாநிலத்தில் ஒரே நேரத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும்.
உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் 9 மருத்துவ கல்லூரிகளை திறந்ததே இதுவரை சாதனையாக இருந்தது. மருத்துவ கல்லூரிகள் திறப்பில் என்னுடைய சாதனைகளை நானே முறியடித்துக் கொண்டிருக்கிறேன். மருத்துவமனைகள் எவ்வளவு முக்கியம் என்பதை கொரோனா தொற்று உணர்த்தியுள்ளது. சுகாதாரத்துறையில் அதிக அக்கறை செலுத்துவதற்கு கொரோனா தொற்று ஒரு முக்கிய காரணம். மத்திய அரசின் காப்பீடு திட்டம் மூலமாக மருந்துகளுக்கான செலவுத்தொகை குறைந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் மருத்துவ திட்டங்களுக்கு ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் மீது எப்போதும் எனக்கு ஆச்சரியம் இருந்துகொண்டே இருக்கிறது. உலகின் மூத்த மொழியாம் தமிழில் சில வார்த்தைகளை ஐக்கிய நாடுகள் சபைகள் பேசியதுதான் என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றுமருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளன. தமிழ் சார்ந்த படிப்புகளில் செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கும். குஜராத்தி மக்களுக்காக குஜராத்தி மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டேன். தாய்மொழி கல்வியை நமது அரசு ஊக்குவிக்கிறது.
தேசிய கல்விக்கொள்கையில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து பொறியில் துறையில் சாதித்தவர்கள் அதிகம். தரமான மருத்துவம், குறைவான செலவில் சிகிச்சை என்ற இலக்கை நாம் சில ஆண்டுகளில் அடைவோம்."
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்