PM Mitra Textile Park:தமிழ்நாட்டில் ஜவுளி மண்டலம், ஆடை பூங்கா அமைக்க முதல்வரால் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!
PM Mitra Textile Park : இந்தியாவின் முதல் பி.எம்.மித்ரா ஜவுளிப்பூங்கா விருதுநகர் இ.குமாரலிங்புரத்தில் அமைகிறது.
தமிழ்நாட்டில் பி.எம். மித்ரா (PM Mega Integrated Textile Regions and Apparel (PM MITRA)) திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ஜவுளி மண்டலம், ஆடை பூங்கா அமைக்க மத்திய -மாநில அரசுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ்கோயல் முன்னிலையில் ஜவுளிப் பூங்காவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
விருதுநகர் இ. குமாரலிங்கபுரம் மாவட்டத்தின் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் அமைய உள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், இந்தியாவின் முதல் பி.எம்.மித்ரா ஜவுளிப்பூங்கா விருதுநகர் இ.குமாரலிங்புரத்தில் அமைகிறது. ஜவுளி வர்த்தகம் முக்கியமானது; தமிழ்நாடு இந்தியாவின் நூல் களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.தொழில்துறையில் உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது என்று தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் அவையின் நிலைத்த வளர்ச்சிக்கான திட்டத்தின் ஒரு பங்காக இந்தியாவின் ஜவுளி அமைச்சகத்தில் இருக்க கூடிய திட்டம் பி.எம்.மித்ரா என்ற பெயரில் நாடெங்கிலும் இருந்து 13 மாநிலங்களில் இருந்து 18 கோரிக்கைகள் வந்திருந்தன.இவற்றில் ஏழு மாநிலங்கள் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டுருக்கின்றன. தமிழ்நாடு, தெலங்கா, மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இத்திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மித்ரா-பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா விருதுநகர் மாவட்டத்தில் அமைப்பதற்கான தொடக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்..” வேளாண்மைக்கு அடுத்தபடியாக, அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் தொழிலாக, நெசவுத் தொழில் திகழ்ந்து வருவதை நாம் பார்க்கிறோம். அப்படிப்பட்ட நெசவுத் தொழில் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடை உற்பத்திக்குப் பெருமை சேர்க்கும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் அமையவுள்ள, ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா அமைய இருக்கிறது.
தொழில் துறையைப் பொறுத்தவரையில், இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவிலான கவனத்தைத் தமிழ்நாடு ஈர்த்துள்ளது. அந்தத் தொழில் துறையில் ஜவுளி வர்த்தகமும் முக்கியமானதாகும். நம் நாட்டின் கைத்தறித் துணி வர்த்தகத்தில், தமிழ்நாடு மூன்றில் ஒரு பங்கு வகிக்கிறது. பெருமளவு பருத்தி நூல் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால், தமிழ்நாடு ‘இந்திய நாட்டின் நூல் களஞ்சியம்’ என அழைக்கப்படுவதோடு, நூற்பு, கைத்தறி நெசவு, விசைத்தறி நெசவு, ஆயத்த ஆடை மற்றும் ஆடைத் தயாரிப்பில் முதன்மையான மாநிலமாகத் திகழ்வதாக அவர் குறிப்பிட்டு பேசினார்.
தொழில்துறை வளர்ச்சி
சிப்காட் நிறுவனம் தமிழ்நாட்டில் பெரிய மற்றும் நடுத்தரத் தொழில்கள் உடனடியாக தொடங்கிட ஏதுவாக தொழில் வாய்ப்புள்ள பகுதிகளில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற்பூங்காக்களை ஏற்படுத்தி, பராமரித்து வருகிறது தமிழ்நாடு அரசு. இந்நிறுவனம், இதுநாள் வரை, 6 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உட்பட 28 தொழிற் பூங்காக்களை, மொத்தம் 38 ஆயிரத்து 522 ஏக்கரில் ஏற்படுத்தியுள்ளது.இத்தொழிற் பூங்காக்களில் தற்போது 2 ஆயிரத்து 890 நிறுவனங்கள், 3 இலட்சத்து 94 ஆயிரத்து 785 பணியாளர்களுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.மேலும், தொழில் முனைவோரின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக சிப்காட் ஓசூர் மற்றும் திருபெரும்புதூர் தொழில் பூங்காக்களில் ஏற்படுத்தப்பட்ட தொழில் புத்தாக்க மையங்கள் (Innovation Centres) பயன்பாட்டில் உள்ளன.
வேலைவாய்ப்பு
இந்தப் பூங்கா முழு அளவில் செயல்படும்போது, சுமார் 2 இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறுவதோடு, தென்மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் ஊக்கமளிப்பதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 10 சிறிய கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் அரசு அறிவித்திருந்தது.
தமிழ்நாட்டில் கிடைக்கப்பெறும் அனைத்துத் தொழில் வாய்ப்புகளையும், தொழில் நிறுவனங்களும், தொழில் முனைவோர்களும் பயன்படுத்திக் கொண்டு, நிர்ணயித்துள்ள இலக்கான, 2030-2031 ஆண்டுக்குள், தமிழ்நாட்டில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியினை எய்திட அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.