இடுப்பளவு தண்ணீரில் கல்யாண சீர்வரிசை.! ஆபத்தை உணராமல் ரிஸ்க் எடுக்கும் கடலூர் கிராம மக்கள்!
ஸ்ரீ நெடுஞ்சேரி -பவழங்குடி ஆகிய கிராமங்கள் மட்டுமல்லாமல் காவனூர் கார்மாங்குடிவரை ஸ்ரீமுஷ்ணம் மக்கள் மேம்பாலம் இல்லாமல் பல கிலோமீட்டர் சுற்றி வரும் நிலை ஏற்பட்டிருந்தது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு ஆறுகள், குளங்கள், ஏரிகள் ஆகியவை அனைத்தும் வேகமாக நிரம்பிவருகின்றன.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே ஸ்ரீ நெடுஞ்சேரி -பவழங்குடி கிராமங்களுக்கு பாலம் இல்லாத காரணத்தினால் திருமணத்திற்கு சென்ற பொதுமக்கள் ஆபத்தை உணராமல் தண்ணீரில் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது
விருத்தாசலம் அடுத்த தே.பவழங்குடி- நெடுஞ்சேரி இடையே வெள்ளாறு செல்கிறது. தே.பவழங்குடி, கீரமங்கலம், தேவங்குடி, காவனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இந்த ஆற்றை கடந்துதான் சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரவேண்டும். ஆற்றில் தண்ணீர் வராத நேரங்களில் அங்கு தற்காலிக பாதை அமைத்து அதன் வழியாக சென்றுவந்தனர்.
இதற்கிடையே 5 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 17 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை சுவர் கட்டப்பட்ட நிலையில் ஸ்ரீ நெடுஞ்சேரி -பவழங்குடி ஆகிய கிராமங்கள் மட்டுமல்லாமல் காவனூர் கார்மாங்குடிவரை ஸ்ரீமுஷ்ணம் மக்கள் மேம்பாலம் இல்லாமல் பல கிலோமீட்டர் சுற்றி வரும் நிலை ஏற்பபட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது பெய்துவரும் தொடர் மழை காரணமாக தடுப்பணை சுவர் நிரம்பி சேத்தியாதோப்பு வழியாக உபரி நீர் கடலில் கலக்கிறது.
நிலைமை இப்படி இருக்க பவழங்குடி கிராமத்தில் உள்ள மக்கள், அவர்கள் ஊரில் ஒருவரின் திருமணத்திற்காக சென்றனர். ஸ்ரீ நெடுஞ்சேரி பகுதியில் நடைபெற்ற திருமணத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் பவழங்குடி கிராமத்திற்கு பேருந்தில் பயணம் செய்தால் சுமார் 20 கிலோமீட்டர் கருவேப்பிலங்குறிச்சி வழியாக சுற்றி வர வேண்டும் என்பதால் அவர்கள் அனைவரும் இடுப்பு அளவு தண்ணீரில் சீர்வரிசை சாமான்கள் எடுத்துச் செல்லும் அவல நிலை ஏற்ப்படுள்ளது.
இதனால் திருமணத்திற்கு சென்ற மக்கள் ஆற்றில் ஏற்பபடுள்ள வெள்ளப்பெருக்கை பொருட்படுத்தாமல் தண்ணீரில் நடந்து சென்றனர்.
இதில் சில பெண்கள் தங்களது குழந்தைகளை கையில் பிடித்தபடியும், கையில் தூக்கி வைத்து கொண்டும் செல்லும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஆற்றில் தண்ணீர் மேலும் பெருக்கெடுத்து ஓடும் பட்சத்தில் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நீர் நிலைகளில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள சூழலில் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்