EB Bill: மின் கட்டணம் செலுத்துவதில் ”அடுத்த ஆஃபர்” - மிக்ஜாம் புயல் பாதித்த 4 மாவட்ட மக்களுக்கு புதிய அறிவிப்பு
மிக்ஜாம் புயல் பாதித்த 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த புதிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் பாதித்த 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த புதிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மின் கணக்கீடு செய்யும் பணியானது 2 மாதங்களுக்கு ஒருமுறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமமின்றி மின் கட்டணம் செலுத்தி வந்தனர். அதனை மாதம் ஒருமுறையாக மாற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இப்படியான நிலையில் கடந்த டிசம்பர் 4,5 ஆகிய தேதிகளில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மழைநீர் வடிந்தவுடன் மின்சாரமானது படிப்படியாக வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் முழு வீச்சில் நடைபெற்ற மீட்பு பணிகளால் அடுத்த சில தினங்களிலேயே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பியது.
இப்படியான நிலையில் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் விடுமுறை நாளில் ரேஷன் கடை திறப்பு, தொலைந்த சான்றிதழ்களுக்கு பதில் மாற்று சான்றிதழ் வழங்குதல், ரூ. 6 ஆயிரம் நிவாரண தொகை வழங்குதல் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு தமிழ்நாடு அரசு மின் கட்டணம் செலுத்துவது தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட இடர்ப்பாடுகள் காரணமாக, மின்கட்டணம் அபராதம் இல்லாமல் செலுத்த டிசம்பர் 18 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இது வீடுகள் மட்டுமின்றி 4 மாவட்டங்களில் உள்ள சிறு, குறு தொழில் செய்யும் மின் நுகர்வோர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதியடைந்தனர். இந்நிலையில் 4 மாவட்டங்களில் சில இடங்களில் வெள்ள நீர் வடியாததால் டிசம்பர் மாதம் எடுக்கப்படும் மின் கணக்கீடு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அக்டோபர் மாத மின் கட்டணத்தை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் மாதம் கணக்கீடு செய்யாதவர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.