OPS Vs EPS: ரகசியங்களை காலம் வரும்போது வெளியிடுவேன் - இபிஎஸ்க்கு செக் வைக்கும் ஓபிஎஸ்!
OPS Interview: நேற்று திருச்சிக்கு வந்த பிரதமர் மோடியை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சந்தித்து பேசினார்.
தமிழ்நாட்டிற்கு நேற்று அதாவது ஜனவரி 2ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை புரிந்ததற்குப் பின்னர் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று திருச்சிக்கு வந்த பிரதமர் மோடியை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இதுதொடர்பாக பேசியுள்ளார். அதில் மிகவும் கவனம் பெற்ற விஷயங்கள் என்னவென்றால், முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குறித்து பன்னீர் செல்வம் பேசியிருப்பது, தமிழ் நாடு அரசியல் களத்தில் புகைச்சலை அதிகப்படுத்தியுள்ளது.
அதாவது, “பிரதமரை நேற்று மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன். அவரிடம் அரசியல் எதுவும் பேசவில்லை. வரும் பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை டி.டி.வி. தினகரனுடன் இணைந்து எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளோம். வாய்ப்பு கிடைத்தால், சசிகலா விரும்பினால், இது தொடர்பாக சசிகலாவைச் சந்தித்து பேசவும் தயாராக இருக்கின்றேன். எடப்பாடி பழனிசாமி தொடர்பான ரகசியங்களை பொதுவெளியில் கூறமுடியாது. காலம் வரும்போது கட்டாயம் வெளியிடுவேன். பாஜகவுடன் இணைந்து செயல்படுவதற்கான நல்ல சூழல் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்கவும் தாயாராக இருக்கிறேன். அதிமுகவை மீட்டெடுப்பதற்கான முயற்சி தொடரும். உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் என நம்புகின்றேன்” என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஓ பன்னீர் செல்வம் கோவையில் தனது சகாக்களுடன் நடத்திய பொதுக்கூட்டத்தில், ”எடப்பாடி பழனிச்சாமியின் அதிகாரபோதையால் தான் அதிமுக கடந்த கால தேர்தல்களில் (ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்) தோற்றது. அதிமுக இயக்கம் தொண்டர்களால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி பக்கம் குண்டர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.
உண்மையான அதிமுகவை மீட்டெடுப்பதற்காக மட்டுமே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். தனிக்கட்சி தொடங்கப் போவதில்லை. எடப்பாடி பழனிசாமி இடமிருந்து அதிமுகவை மீட்டெடுக்க போகிறோம். எந்த காலத்திலும் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை. வருகின்ற நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு அமைப்பாக தான் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு பாதுகாப்பு குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தான் வாய் திறந்தால் எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறைக்கத்தான் செல்ல வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளித்து நரேந்திர மோடியை பிரதமர் ஆக்கப் போகிறோம்” எனத் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி குறித்து ஓ. பன்னீர் செல்வம் பேசியிருப்பது ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசியலிலும் கவனம் பெற்றிருந்தாலும், பிரதமரைச் சந்தித்த பின்னர் எடப்பாடி பழனிசாமி குறித்த ரகசியங்களை வெளியிடுவேன் எனக் கூறியுள்ளதும், வாய்ப்பு கிடைத்தால் பிரதமர் மோடியை நேரில் சந்திக்கவும் தயாராக இருப்பதாக ஓ பன்னீர் செல்வம் கூறியிருப்பது அதிமுக முக்கிய நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.