OPS Statement: சனாதனம் பற்றி பேசி பிரச்சனையை திசை திருப்புகிறது திமுக - ஓபிஎஸ்
சனாதனம் பற்றி பேசி மக்களின் பிரச்சனையை திசை திருப்ப திமுகவினர் முயற்சிக்கின்றனர் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி, “சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது. அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்” என பேசியிருந்தார். இதன் மூலம் இந்து மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு உதயநிதி அழைப்பு விடுப்பதாக பாஜக குற்றம்சாட்டியது. தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த பல தலைவர்களும், இந்து அமைப்பினரும் உதயநிதிக்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். உத்திர பிரதேச சாமியார் பரமஹம்ஸ் ஆச்சாரியா அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூபாய் 10 கோடி விலை நிர்ணயம் செய்தும், அவரது புகைப்படத்தை தீ வைத்து கொளுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்படி பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு பக்கம் சனாதனம் என்றால் என்ன என்பது குறித்து பலரும் பல விதமாக விளமளித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி பேசியதை வைத்து மக்களின் பிரச்சனையை திசை திருப்ப திமுகவினர் முயற்சிக்கின்றனர் என குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “விடியலை நோக்கி' என்று மேடைக்கு மேடை தேர்தல் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., இன்று தமிழ்நாட்டு மக்களை 'விரக்தியை நோக்கி' அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, பதிவுக் கட்டண உயர்வு, குடிநீர் வரி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு என பலமுனைத் தாக்குதல்களுக்கு பொதுமக்கள் ஆளாகி விரக்தியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தி.மு.க.வின் மீது மக்களுக்குள்ள வெறுப்பினை, அதிருப்தியினை திசை திருப்பும் வகையில், சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார். இல்லாத ஒன்றை ஒழித்துக் கட்டுவதாக பேசுவது கடும் கண்டனத்திற்குரியது. இந்திய அரசமைப்புச் சட்டப்படி அரசாங்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில், அதற்குரிய பலனை மக்கள் பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், சனாதனம் குறித்து பேசுவது தேவையற்றது. சமதர்மம் குறித்து பேசும் தி.மு.க. முதலில் தி.மு.க.வில் சமதர்மம் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
தி.மு.க.வின் மீதுள்ள அதிருப்தியை திசை திருப்ப தி.மு.க. முயன்றாலும் அது மக்கள் மத்தியில் நிச்சயம் எடுபடாது. வருகின்ற தேர்தலில் தி.மு.க. மண்ணைக் கவ்வுவது நிச்சயம். அரசனின் கொடுமை தாங்காமல் மக்கள் வடிக்கும் கண்ணீர் ஆட்சியை அகற்றும் ஆயுதமாகும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, தி.மு.க. ஆட்சி அகற்றப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
Vijay Makkal Iyakkam: அடுத்த டார்கெட் மகளிர் அணிதான்! - தேதி குறித்த விஜய் மக்கள் இயக்கம்!
Pakistan Name Change: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. பாகிஸ்தானின் பெயர் 'இந்தியா' என மாற்றமா?