(Source: ECI/ABP News/ABP Majha)
AIADMK: பரபரப்பில் இபிஎஸ்.. பதற்றத்தில் ஓபிஎஸ்.. பொதுக்குழு தீர்மானத்தின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு..!
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பளிக்க உள்ளனர்
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பளிக்க உள்ளனர்.
கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தற்போதைய பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, தற்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனால் அதிருப்தியடைந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களான பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர்
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், தங்களை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர, இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினார்.
இதனையடுத்து இந்த வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. இருதரப்பு வாதங்களை கேட்ட பின், அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பு வழங்கி ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்தது. அதேசமயம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி விசாரித்த தனி நீதிபதி, ஓபிஎஸ் தரப்பு மனுக்களை தள்ளுபடி செய்தார். இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்த நிலையில் இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு விட்ட நிலையில், இந்த தீர்ப்பு அவருக்கு ஆதரவாகவே வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக இருந்தால் என்ன செய்யலாம் என்பதில் இபிஎஸ் தரப்பும் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பை அரசியல் வட்டாரத்தில் இருப்பவர்கள் பெரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.