ஆன்லைன் ரம்மி: நடிகர்கள் திருந்த வேண்டும் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள் திருந்த வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள் திருந்த வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாநிலத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது:
ஆன்லைன் ரம்மியை ஒழிக்க நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையிலேயே கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த விஷயத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேலி செய்யும் வகையில் பேசியிருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.
தமிழகத்தில் போதை பொருட்களை விற்பனை செய்பவர்களும் அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை ஒழிக்க நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும். அதன் பின்னர், இதனை முழுமையாக ஒழிக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டு வரப்படும். கடந்த ஆட்சியாளர்கள் மக்களிடம் கருத்து கேட்டு முறையாக இந்த சட்டத்தை கொண்டு வந்திருந்தால், ஆன்லைன் ரம்மியை தடை செய்திருக்கலாம். அரசு நிரந்தரமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழிக்க நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் நிச்சயம் தடை விதிக்கப்பட்டும்.
இவ்வாறு அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
தொடரும் ஆன்லைன் ரம்மி பிரச்சினைகள்:
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவது கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த மாதம் 22ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தொடர்பாக உறுப்பினர்களின் கேள்வி, பதில் நேரத்தில், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதனைத்தொடர்ந்து, அவர் பேசுகையில், ஆன்லைன் சூதாட்டம் குறித்து எந்த சட்டமும் தமிழ்நாட்டில் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்றும், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் சில இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், சென்னை மெட்ரோ ரயில் ஊழியர் இந்த விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை குறிப்பிட்டும் பேசினார். மேலும், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இபிஎஸ் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், கடந்த ஆட்சியில் அவசரமாக கொண்டு வரப்பட்ட சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதாகவும், அரசு வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து தற்போது ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் விளக்கமளித்தார்.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்