சாகும் போதும் இணை பிரியாத தம்பதி... பெரம்பலூர் அருகே சோகம்!
வயதானாலும் அவர்களுக்கு இடையே இருந்த காதல் மட்டும் இளமை மாறாமல் புத்துணர்ச்சியாக இருந்து வந்தது. ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்த அன்பும் பாசமும் காட்டி வாழ்ந்து வந்தனர். ராமசாமியும், ராமாயியும்...
பெரம்பலூர் அருகே கணவர் இறந்ததை அறிந்த மூதாட்டி அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே அமைந்து உள்ளது கை.களத்தூர் ஊராட்சி. அதற்கு உட்பட்ட சிறுநிலா கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 74). விவசாயியான ராமசாமிக்கு 70 வயதில் ராமாயி என்ற மனைவி உள்ளார். கணவன் மனைவி இருவருக்கும் திருமணம் ஆகி 50 வருடங்கள் கடந்து விட்டன. இருப்பினும், வயதானாலும் அவர்களுக்கு இடையே இருந்த காதல் மட்டும் இளமை மாறாமல் புத்துணர்ச்சியாக இருந்து வந்தது. ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்த அன்பும் பாசமும் காட்டி வாழ்ந்து வந்தனர். எங்கு வெளியில் சென்றாலும் ராமசாமியும், ராமாயியும் பிரியாமல் ஒன்றாகவே செல்வார்கள் என அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவர்களுக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். அவரும் அவரது மனைவியும் ராமசாமி, ராமாயி தம்பதியை வயதான காலத்தில் கவனித்து வந்து இருக்கின்றனர். இந்த நிலையில், ராமசாமியின் அண்ணன் முத்துச்சாமி என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அண்ணன் மீது அதிக பாசம் வைத்திருந்த ராமசாமி, அவரது மறைவை தாங்க முடியாமல் மன வேதனையில் இருந்து வந்து உள்ளார். இதனால் ராமசாமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அவர் எழுந்துகூட நடக்க இயலாமல் கடந்த ஆகஸ்டு மாதம் 18 ஆம் தேதி முதல் படுத்த படுக்கைக்கு சென்று உள்ளார். தனது அன்பு கணவன் ராமசாமியின் இந்த நிலையை கண்டு மனைவி ராமாயியும் மனவேதனை அடைந்து உள்ளார். ஒருநாள் ராமாயி நிலைத் தடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்து அவரும் எழுந்து நடமாட முடியாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த சனிக் கிழமை இரவு ராமசாமி உடல் நலம் தேராமல் உயிரிழந்தார். அவரது மனைவி ராமாயி, தனது அன்புக் கணவர் ராமசாமியின் மறைவுச் செய்தியைக் கூட அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு சுய நினைவின்றி படுக்கையில் கிடந்துள்ளார். அடுத்த நாள் ராமசாமிக்கு இறுதிச் சடங்கு செய்ய அவரது உடல் மீது உறவினர்கள், பொதுமக்கள் பூ மாலைகளை போட்டுக் கொண்டிருந்தனர். திடீரென படுக்கையில் இருந்த ராமாயிக்கு சுதாரிப்பு வந்தது. தனது கணவன் உடல் மீது மாலை போட வேண்டாம் என அழுதார். கணவர் மரணத்துக்காக கண்ணீர் சிந்தியபடியே ராமாயியின் உயிரும் பிரிந்தது.
கணவரின் இறப்புச் செய்தி அறிந்து, அவரது உடலின் மீது பூ மாலை போடப்பட்டதை சுதாரித்த ராமாயி பாட்டியும் மறுநாளே உயிரிழந்தது அவர்களின் உறவினர்கள் மற்றும் கை.களத்தூர் பகுதி மக்களை சோகத்தில் மூழ்க செய்து உள்ளது. இதையடுத்து, ராமசாமி – ராமாயி தம்பதியின் உடல்களுக்கு ஒன்றாக இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. வாழும் வரை எங்கும் ஒன்றாகவே சென்ற ராமசாமி – ராமாயி தம்பதி சாவிலும் ஒன்றாகவே பயணித்து இருக்கின்றனர்.