(Source: ECI/ABP News/ABP Majha)
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கு..
தமிழ்நாடுஆளுநரை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக தற்போது இடைநீக்கம் செய்யப்பட்ட ஆளும் திமுக கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக தற்போது இடைநீக்கம் செய்யப்பட்ட ஆளும் திமுக கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் `ஆளுநரை அவதூறாகப் பேசக்கூடாது' என தன்னுடைய கட்சியினருக்கு அறிவுரை வழங்கியிருந்தார். இருப்பினும், ஆர்.எஸ்.பாரதி உட்பட தி.மு.க.வினர் சிலர் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை அவதூறாகப் பேசிவருவதாக பா.ஜ.க-வினர் குற்றம்சாட்டிவருகின்றனர்.
பாஜக எதிர்ப்பு:
இதனிடையே, தமிழ்நாடு ஆளுநரை சுட்டுக் கொல்ல தீவிரவாதியை அனுப்புவோம் என தி.மு.க. கழகப் பேச்சாளார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான கருத்து தொடர்பாக தி.மு.க.வின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.க.வின் நாராயணன் திருப்பதி வலியுறுத்தினார்.
இந்நிலையில், திமுகவில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், ”கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் விதத்தில் செயல்பட்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை தற்காலிகமாக நீக்கப்படுகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு தொடர்பாக, ஆளுநர் மாளிகையிலிருந்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் துணைத் தலைவர் கரு நாகராஜன் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். ஆளுநரை அவதூறாக விமர்சித்ததாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழக அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த பல்வேறு கருத்துக்களை வாசிக்காமலும் பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட பெயர்களைத் தவிர்த்தது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆளுநரின் செயலைக் கண்டித்து சட்டப்பேரவையில் அங்கம் வகித்த தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோதே ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.