செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து - உபரிநீர் திறப்பு குறித்து அவசர ஆலோசனை!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், உபரிநீரை திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் விடிய, விடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே 23 அடி உயர்ந்தால் தண்ணீரை திறக்கலாம் என்று அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஏரிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், உபரிநீர் திறப்பது குறித்து அதிகாரிகள் திடீரென ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டமான 24 அடியில் 21.3 அடி தற்போது நிரம்பியுள்ளது. ஏரிக்கு தற்போது நீர்வரத்து 600 கன அடியாக உள்ளது.