Odisha Train Accident: ஒடிஷா ரயில் விபத்து; மயிலாடுதுறையில் மலர்தூவி மக்கள் கண்ணீர் அஞ்சலி
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மயிலாடுதுறையில் பல்வேறு சேவை அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கொல்கத்தாவின் ஷாலிமார் இடையே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து மேற்கு வங்காளம் வரை செல்லும் இந்த ரயிலில் புலம் பெயர் தொழிலாளர்கள் உள்பட பலரும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். எப்போதும் பயணிகள் கூட்டம் இந்த ரயிலில் அலை மோதுவது வழக்கம். இந்நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் நேற்று மாலை ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு கிளம்பியது. இந்த ரயிலில் பயணிகள் அனைவரும் தங்கள் செல்போனில் பேசிகொண்டும், அருகில் உள்ளவர்களிடம் உரையாடி படியும், வேடிக்கை பார்த்தவாறு வந்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது இரவு சுமார் 7 மணி அளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அருகில் உள்ள மற்றொரு தண்டவாளத்தில் பெங்களூரில் கொல்கத்தா சென்ற ஒரு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியிருந்தது.
அந்த ரயிலின் பெட்டிகள் ரெயிலின் சில பெட்டிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்த தண்டவாளத்தில் விழுந்து கிடந்தன. இதனால், அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், அந்த தண்டவாளத்தில் மீது மோதியது. இதில் ரயில் பெட்டிகள் உருக்குலைந்து ஒன்றன் மேன் ஒன்றாக கிடந்தன.இதை அறியாமல் சிறிது நேரத்தில் அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், ஏற்கெனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி, அதன் பெட்டிகளும் தடம் புரண்டன. இதில் பலரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். மீட்புக்குழுவினர் விரைவாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 280- ஐ தாண்டியுள்ளது.சுமார் 1000- க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணிகள் எத்தனை பேர் என்ற விவரம் முழுமையாக கிடைக்கவில்லை.
இந்த விபத்து எதிரொலியாக 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 39 ரயில்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம்-கொல்கத்தா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22641), பெங்களூரு-கௌஹாத்தி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12509), ஹவுரா-திருப்பதி ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் (20889) உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.கன்னியாகுமரி- திப்ருகர் விவேக் எக்ஸ்பிரஸ் (22503), ஹவுரா-மைசூரு எக்ஸ்பிரஸ் (22817) ஆகிய ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. இந்நிலையில் கொல்கத்தாவில் இருந்து தமிழ்நாடு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில், ஹவுரா அதிவிரைவு ரயில் உள்ளிட்ட மூன்று ரயில்கள் ஒடிசாவில் மோதி விபத்திற்கு உள்ளாகி. 1000 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதை அடுத்து, தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் வாயிலில் கோரமண்டல எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தோர்க்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. ரயில் விபத்து ஏற்பட்ட புகைப்படங்கள் உள்ள பேனர் வைக்கப்பட்டு ஜெயின் சங்கம், மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம், மயிலாடுதுறை சென்ட்ரல் லயன் கிளப், கலாம் பவுண்டேஷன், அறம் செய் அறக்கட்டளை சார்பாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதில் பொதுமக்களும் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.