Ponmudi Case: பொன்முடி சொத்துக்களை முடக்க அவசியம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்..
பொன்முடியின் சொத்துக்கள் முடக்கப்பட தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொன்முடியின் முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துக்களை தற்போதைய சூழலில் மீண்டும் முடக்க வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக இருந்தாலும் தற்போது அதை மாற்ற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் சட்டத்திற்கு உட்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
வழக்கு பின்னணி:
கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. அப்போது அவரது சொத்துக்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கியது.
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அப்போதைய அதிமுக அரசின் சட்டத்துறை செயலாளராக இருந்த, தற்போதைய நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன தான் சொத்து முடக்கத்திற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த வழக்கிலிருந்து பொன்முடி மற்றும் அவரது மனைவியை விழுப்புரம் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. மேலும், சொத்துக்கள் முடக்கத்தையும் நீக்கியது. விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்தும் சொத்துக்கள் முடக்கத்தை நீக்கியதை எதிர்த்தும் லஞ்ச ஒழிப்புத்துறை தனித்தனியே உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிவ்ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தன்டனை விதித்து நேற்று நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ள நிலையில், சொத்து முடக்கத்தை விழுப்புரம் நீதிமன்றம் நீக்கியது எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் இன்று காலை நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.