‛தவறான புரிதல்... கமலிடம் எந்த விளக்கமும் கேட்கத்தேவையில்லை’ - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்!
Radhakrishnan on Kamal: டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும் என தான் கூறவில்லையென சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மறுப்பு.
டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும் என தான் கூறவில்லையென சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கு கடந்த நவம்பர் 22ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து, கமல் தனது ட்விட்டர் பதிவில், `அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின்னர் லேசான இருமல் இருந்தது. மருத்துவப் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லை என்பதை உணர்ந்து பாதுகாப்பாக இருங்கள்' எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அவர் போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். நடிகர் ரஜினிகாந்த், போனில் கமலிடம் நலம் விசாரித்தார். சிகிச்சைக்கு பிறகு, அவர் கடந்த 4ஆம் தேதி வீடு திரும்பினார். வீடு திரும்பிய உடனே, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். இது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சாதாரண நபர் கொரோனாவில் இருந்து குணமடைந்தாலும் மருத்துவமனையில் 7 நாட்களும் வீட்டில் 7 நாட்களும் என மொத்தம் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் கமல்ஹாசன் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் எப்படி தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும் என கேள்வி எழுந்தது.
இதுகுறித்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் கமல்ஹாசன் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதில் அளித்த ராதாகிருஷ்ணன், கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று கூறியதாக செய்தி வெளியானது.
ஆனால், ராதாகிருஷ்ணன் தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து நாளிதழ் ஒன்றிற்கு ராதாகிருஷ்ணன் கொடுத்த விளக்கத்தில், “இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு செய்திகள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் 2 தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டதால், அவருக்கு கொரோனா தொற்றின் தாக்கம் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. அவர் 14 நாட்கள் தனிமைக்கு பிறகு, மருத்துவரின் ஆலோசனைப்படியே படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அதனால், அதுதொடர்பாக அவரிடம் எந்த விளக்கமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் பிபிசி தமிழுக்காக பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், "மருத்துவ விதிமுறைகளை மீறக்கூடாது என்பது உண்மைதான். ஆனால், கமலுக்கு மருத்துவர்கள் கொடுத்த அறிவுரை என்பது 3ஆம் தேதியோடு முடிந்துவிட்டது. நான்காம் தேதியில் இருந்து இயல்பான பணிகளுக்கு அவர் திரும்பலாம் எனக் கூறிவிட்டனர். அதற்கான மருத்துவ அறிக்கையும் வெளியானது. அதிலும், தனிமைப்படுத்தப்படுவது தொடர்பாக எந்தக் குறிப்பையும் மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை. தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலருக்குத் தகவல் சரியாக சொல்லப்படவில்லை என்பதாகவே இதைப் பார்க்கிறோம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பங்கேற்றது குறித்து கேட்டபோது, 'அதைப் பற்றி விசாரிக்கிறேன்' எனக் கூறாமல் விளக்கம் கேட்க உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் கூறிவிட்டார். கமல் சிகிச்சை எடுத்து வந்த மருத்துவமனையில் இருந்து 2ஆம் தேதி வந்த அறிக்கையின்படி மூன்றாம் தேதியே அனைத்து நடைமுறைகளும் முடிந்துவிட்டன. தனிமை என்ற கேள்விக்கே அதில் இடமில்லை.
மருத்துவமனையில் இருந்து நேரடியாக அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குத்தான் சென்றார். இத்தனைக்கும் மருத்துவர்களிடம் கூறிவிட்டுத்தான் அவர் சென்றார். அவ்வாறு தனிமைப்படுத்த வேண்டும் எனக் கூறியிருந்தால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அவர் சென்றிருக்க வாய்ப்பில்லை. இந்த விவகாரத்தில் மருத்துவ விதிகள் எதுவும் மீறப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.