Lyricist Thamarai | "என்னை அடியுங்கள்.. வாயில்லா உயிர்களை விட்டுவிடுங்கள்.." ஜல்லிக்கட்டை எதிர்க்கும் கவிஞர் தாமரை
இப்படிச் சொல்லுவதால் எத்தகைய எதிர்ப்பு எழும் என்று எனக்குத் தெரியும். என்னென்ன விதமான வசவுகள் வந்து விழும் என்றும் தெரியும். இருந்தாலும் அப்பாவி விலங்குகளுக்கு வாயில்லை - பாடலாசிரியர் தாமரை
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இளைஞர்களின் மெரினா போராட்டத்துக்கு பிறகு மீண்டும் நடக்கிறது. இந்த ஆண்டும் கொரோனா விதிமுறைகளுடன் போட்டிகள் நடைபெற்றன.
தமிழர்களின் பாரம்பரியத்தை மீட்டெடுத்துவிட்டோம் என்று ஒரு தரப்பினர் கூறினாலும், ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு எத்தனையோ பேர் படுகாயமடைந்தும், உயிரிழந்தும் இருக்கின்றனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமென மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.
இந்நிலையில் பாடலாசிரியரும், கவிஞருமான தாமரை ஜல்லிக்கட்டு போட்டிகள் தேவையில்லை என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், “ சல்லிக்கட்டு தேவையில்லை. இப்படிச் சொல்லுவதால் எத்தகைய எதிர்ப்பு எழும் என்று எனக்குத் தெரியும். என்னென்ன விதமான வசவுகள் வந்து விழும் என்றும் தெரியும். இருந்தாலும் அப்பாவி விலங்குகளுக்கு வாயில்லை, பேச முடியாது என்பதால் அவற்றுக்காக நான் பேசுகிறேன். என்னை அடியுங்கள், வாயில்லா உயிர்களை விட்டுவிடுங்கள்.
இதுநாள்வரை பாரம்பரியம்/பன்னெடுங்கால வழக்கம் என்பதன் அடிப்படையில் 'சல்லிக்கட்டு' என்னும் 'காளை விளையாட்டு' ஆடப் பட்டிருக்கலாம். ஆனால், விலங்குகளின் உரிமை எனும் பார்வையில் உலகம் விழித்துக் கொண்ட வேளை இது ! இனியும் சல்லிக்கட்டு போன்ற, மனிதன் விலங்குகளை அச்சுறுத்தும் அநாகரீக விளையாட்டு தேவையில்லை. சேவல் சண்டை, ஆட்டு சண்டை, நாய்ச்சண்டை,ரேக்ளா பந்தயம், குதிரைப் பந்தயம் உள்ளிட்ட அனைத்து விலங்குவாதை விளையாட்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
விலங்குகள் உயிர் மட்டுமல்ல, உணர்வும் உள்ளவை. அவற்றுக்கு வலி, வேதனை, அச்சம், அதிர்ச்சி, பாசம் அனைத்தும் உண்டு. அவற்றை விளையாட்டுப் பொருளாக்குவது நமக்கு வேண்டுமானால் வேடிக்கையாக இருக்கலாம், அவற்றுக்கு அது நிச்சயம் வாதையே. எந்த விளையாட்டிலும் இருதரப்பு இருக்கும், இருதரப்புக்கும் விளையாட்டின் விதிமுறைகள் தெரிந்திருக்கும், அவற்றை ஏற்றுக் கொண்டே விளையாட வந்திருப்பார்கள். ஆனால் சல்லிக்கட்டு போன்ற விலங்கு விளையாட்டுகளில் மறுதரப்பான விலங்குகளுக்கு விதிமுறை தெரியாது...அது விளையாட்டு என்றே தெரியாது. மறுதரப்பால் ஏற்றுக் கொள்ளப்படாத விளையாட்டை விளையாட்டு என்று சொல்வதே குற்றம் !. அதன் பெயர் வன்முறை.
நினைவு தெரிந்தநாள் முதல் நான் விலங்கு-மனிதன் விளையாட்டுகளை எதிர்த்தே வந்திருக்கிறேன். சில ஆண்டுகளுக்குமுன் மெரினாவில் நடைபெற்ற 'சல்லிக்கட்டு'ப் புரட்சியின்போதுகூட அதற்கு ஆதரவாக நான் நிற்கவில்லை. புரட்சி செய்ய ஆயிரம் காரணங்கள் இருக்க போயும் போயும் சல்லிக்கட்டை முன்னிறுத்தி சமூகம் திரண்டது வேதனையளித்த நிகழ்வு. விலங்குரிமைக் குரல்கள் எழும்பி மேல் வரும் இன்றைய சூழ்நிலையில் நான் அவற்றுக்காக உரக்கக் குரல் கொடுக்கிறேன்.
#சல்லிக்கட்டை எதிர்க்கிறேன், #IopposeJallikkattu, #AnimalRightsIsNewNorm, #BanAllTypesOfAnimalSports இவற்றை எதிர்ப்பதால் தமிழர் அடையாளம் இழப்பர் என்பது தவறான பார்வை. தமிழர் அடையாளமாக வேறு ஏராளமான வழக்கங்கள் உள்ளன. அவற்றை வளர்த்தெடுப்போம். உதாரணமாக 'தமிழர் தமிழிலேயே பேசுவது', 'மம்மி டாடியைக் கைவிடுவது.
சல்லிக்கட்டுக்கும் விலங்கு விளையாட்டுக்கும் எதிரான கருத்துள்ளவர்கள் குரலெழுப்புங்கள். நம் குரல் ஓங்கி ஒலித்தால், மெரினா அலையை விடவும் பெரிதாக இருக்கும், விலங்கு சமூகத்தின் வாழ்த்தும் கிடைக்கும்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்