நிபா வைரஸ் அச்சுறுத்தல் : தமிழக - கேரள எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் - அமைச்சர் மா.சு தகவல்..!
தடுப்பூசிக்கு கட்டுப்படாத சி .1.2 வகை கொரனோ வைரஸ் பரவல் எதிரொலியால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரம்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சலால் 12 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு, கேரளா எல்லையோர 9 மாவட்டங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மடுவின்கரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர்கள், முதியவர்கள், விதவைகள், உடல் ஊனமுற்றவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “கேரளாவில் ஜிகா வைரஸ் தாக்கம் ஏற்படும்போதே கேரளா - தமிழக எல்லையில் காய்ச்சல் முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது கேரளாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் தமிழக - கேரள எல்லையோர 9 மாவட்டங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகத்தில் 3 கோடியே 50 லட்சத்து 20 ஆயிரத்து 70 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் புதிய உச்சமாக 6 லட்சத்து 20 ஆயிரத்து 225 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசிடம் இருந்து ஒரே நாளில் 19 லட்சத்து 22 ஆயிரத்து 80 டோஸ் தடுப்பூசிகள் இன்று தமிழ்நாடு வர உள்ளன. வரும் 12-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் தடுப்பூசி முகாம்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.நோய் தொற்று அதிகம் உள்ள 9 மாவட்டங்களில் கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள் திறப்பால் பெருமளவில் இதுவரை நோய் தொற்று கண்டறியப்படவில்லை. நோய் தொற்று கண்டறியப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு நோய் தடுப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசிக்கு கட்டுப்படாத சி .1.2 வகை கொரனோ வைரஸ் உலக அளவில் 9 நாடுகளில் பரவிய நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குழந்தைகள் மீதான கொரோனா பாதிப்பு 6 முதல் 10 சதவீதமாக உயர்ந்தாலும் குழந்தைகள் உயிரிழப்பு தமிழ்நாட்டில் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மீதான நோய் பரவலை கட்டுப்படுத்திட தமிழ்நாடு சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று கூறினார்.
Nipah Virus: நிபா வைரஸ் எப்படி பரவும்? நிபா பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை என்ன?