Nilgiris Heavy Rain: மூடப்பட்ட சுற்றுலா தளங்கள்.. மிதக்கும் ஊட்டி.. தத்தளிக்கும் மக்கள்! விடாமல் அடிக்கும் மழை
நீலகிரி மாவட்டத்தில் மழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில் அங்குள்ள சுற்றுலா தளங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பொதுவாக கோடை காலங்களில் வெயில் வாட்டி வதைக்கும். ஆனால், கடந்த சில வருடங்களாகவே கோடை காலங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டும் கோடை கொளுத்தும் வெயிலாக தொடங்கினாலும் தற்போது மழைக்காடாக மாறியுள்ளது.
தொடரும் அதிகனமழை:
குறிப்பாக, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை நேற்றும், இன்றும் விடுக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றவாறு இந்த இரு மாவட்டங்களிலும் சில தினங்களாகவே பரவலாக பெய்து வந்த மழை, கடந்த இரு தினங்களாக தீவிரமாக பெய்து வருகிறது.
குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் மழை தொடர்ந்து தீவிரமாக பெய்து வருவதால் பல இடங்களில் மண் அரிப்பு, மண் சரிவு ஏற்பட்டுள்ளது. நீலகிரி உள்ளே பாயும் பல ஓடைகள், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா தளமான ஊட்டி நீலகிரி மாவட்டத்திலே அமைந்துள்ளது. அங்கும் மழை கடந்த சில தினங்களாகவே கொட்டி வருகிறது.
மூடப்பட்ட சுற்றுலா தளங்கள்:
தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம், பைகாரா நீர்வீழ்ச்சி, அவலாஞ்சி சூழல் சுற்றுலா மையம் ஆகிய நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்கள் அனைத்தும் மழை காரணமாக மூடப்பட்டுள்ளது. மழையின் தாக்கம் தொடர்ந்து இருப்பதால் நீலகிரிக்கு கோடை விடுமுறைக்காக சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளனர். நீலகிரி மட்டுமின்றி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் பல இடங்களில் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி தங்க வைத்துள்ளனர். பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, பொதுமக்களுக்கு அவர்களது அத்தியாவசிய பொருட்களான பால், குடிநீர் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் எந்த தடையும் இன்றி கிடைப்பதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கோடையை குளிர்வித்த மழை:
கோவை, நீலகிரி மட்டுமின்றி ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மாவட்டங்கள் மட்டுமின்றி கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பல முக்கிய நீர்நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
கோடை வெயிலை தணிக்கும் விதமாக இந்த மழை இருந்தாலும் கோடை விடுமுறை முடியும் தருவாயில் குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தவர்களுக்கு சற்று வேதனையை ஏற்படுத்தியுள்ளது.





















