Navaratri 2023: களைகட்டும் நவராத்திரி விழா! நாவலூரில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட துர்கா பூஜை!
சென்னை நாவலூரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களால் துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
Navaratri 2023: சென்னை நாவலூரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களால் துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நவராத்திரி 2023:
புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு 9 நாள்கள் கொலு வைத்து கொண்டாடுவது வழக்கம். இது வடமாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
துர்கா பூஜை:
நவராத்திரி விழா இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாடபட்டாலும் மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை, அகால போதான் , துர்கோட்சப் ஆகிய பெயர்களில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சஷ்டி தொடங்கி தசமி வரை இவ்விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒடிசா, அசாம், பீகாரிலும் இதை மிகச்சிறப்பாக கொண்டாடுவர். பொது இடங்களில் பந்தல் அமைத்து துர்கா தேவியை 9 நாட்களும் பூஜை செய்வார்கள். பிரபல கால்பந்து ஜாம்பவான் மரடோனா இந்த ஆண்டு கொல்கத்தாவிற்கு வருகை தந்து துர்கா பூஜை பந்தலை திறந்துவைத்தது நினைவிருக்கலாம்.
இந்த துர்கா பூஜையானது இந்தியாவில் இருந்து வந்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நபர்களால் சென்னையிலும் நடத்தப்படுகிறது. சென்னை நாவலூரில், தக்ஷின சென்னை ப்ரபாசி கலாச்சார மையத்தின் சார்பில் துர்கா பூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த மையத்தில் சுமார் 250 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த துர்கா பூஜையானது கொரோனா காலத்தில் ஆன்லைனில் கொண்டாடப்பட்டது.
துர்கா பூஜை:
இந்த ஆண்டு நாவலூர் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள ஒரு தனியார் அரங்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவின் நோக்கமே அனைத்து மாநில மக்களும் இணைத்து துர்கா பூஜையை கொண்டாடுவதே ஆகும். 5 நாள்கள் கொண்டாடப்படும் இவ்விழா பரதநாட்டியம், பாடல்கள் ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக செட்டிநாடு குழுமத்தின் தலைவர் முத்தையா கலந்து கொண்டார். இவ்விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் கலந்துகொண்டனர்.
அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மக்களையும் ஒன்றிணைக்கும் வகையில் துர்கா பூஜையை கொண்டாடும் தக்ஷின சென்னை ப்ரபாசி கலாச்சார மையத்தை முத்தையா வெகுவாகப் பாராட்டினார். இவ்விழாவில் துர்கையம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இவ்விழா அக்டோபர் 24ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இவ்விழா நாள்களில் இந்தியன் ஐடோல் புகழ் செஞ்சுட்டி தாஸ் மற்றும் சரிகமப புகழ் ராகுல் சின்ஹா ஆகியோரது நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 23ம் தேதி தாண்டியா இரவு கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.