கரூரில் துப்புரவு பணியாளர்கள் குறைகளை கேட்டறிந்த தேசிய துப்புரவு பணியாளர்கள் ஆணைய குழு தலைவர்
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தோரணக்கல்பட்டியில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகளில் துப்புரவு பணியாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது குறித்து கேட்டறிந்தார்.
கரூர் தேசிய துப்புரவு பணியாளர்கள் ஆணைய குழு தலைவர் வெங்கடேசன் கரூரில் துப்புரவு பணியாளர்கள் வசிக்கும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தூய்மை பணியாளர்கள் பல்வேறு குறைகளை கோரிக்கைகளாக முன் வைத்தனர்.
தேசிய துப்புரவு பணியாளர்கள் ஆணைய குழு தலைவர் வெங்கடேசன் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தோரணக்கல்பட்டியில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகளில் துப்புரவு பணியாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து பாலம்மாள்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் துப்புறவு பணியாளர்களின் வீடுகளை ஆய்வு செய்தார். துப்புரவு பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா, சம்பளம் முறையாக குறித்த நேரத்தில் கொடுக்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேசன், “கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். புதிய அடுக்குமாடி குடியிருப்புகளில் காலியாக உள்ள வீடுகளை துப்புரவு பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்து கொடுக்கும்படி கேட்டிருக்கிறேன். பயனாளிகள் தரப்பில் கொடுக்கப்படும் 1 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க முடியாது என்பதால் அவர்களுக்கு வங்கி கடன் வசதி ஏற்பாடு செய்து கொடுக்க ஆணையரிடம் கேட்டு இருக்கிறோம். துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் கிளவுஸ் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டால், அதனை அவர்கள் முறையாக பயன்படுத்துவது இல்லை என்கின்ற பிரச்சினை இந்தியா முழுவதும் இருக்கிறது. பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் உபகரணங்களுக்கு பதிலாக மாற்றுப் பொருட்களால் தயாரிக்கப்படுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். நான் விசாரித்த வரை இங்கு குடிநீர் பிரச்சினை இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, பாலம்மாள் புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் அவரை சுற்றிக் கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். இப்பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர் கிடைக்காமல் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிரப்படுவதாகவும், குடிநீருக்காக நீண்ட தூரம் சென்று எடுத்து வரக் கூடிய நிலை இருப்பதாகவும், சாக்கடைகளை சுத்தம் செய்ய பணியாளர்கள் முறையாக வருவது இல்லை என சரமாரியாக குற்றம் சாட்டினர். அதிகாரிகள் வருவதால் இப்பகுதியை சுத்தம் செய்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டினர்.