NIA: தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 60 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை: காரணம் என்ன?
தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளா உள்பட 60 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, நெல்லை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை எனுப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 40 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் நடைபெற்ற கார் குண்டிவெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் மண்ணடி, கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா மற்றும் கர்நாடகாவிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மொத்தம் 60 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
60 இடங்களில் சோதனை:
கோவையில் கடந்தாண்டு உக்கடத்தில் நடைபெற்ற கார் வெடிப்பு விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், வெடித்து சிதறிய காரில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வெடிகுண்டு மருந்து பொருட்கள் இருந்ததால் இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கினர்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி வந்த நிலையில், சில முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இன்று காலை முதல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் 60 இடங்களில் என்,ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி, கோவை,சென்னை:
தமிழ்நாட்டில் சென்னையில் கொடுங்கையூர், மண்ணடி ஆகிய பகுதிகளிலும், கோவையில் 15 இடங்களிலும், திருநெல்வேலியிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலியில் சுத்தமல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கரிக்காதோப்பு பகுதியில் அன்வர்தீன் என்பவரது வீட்டில் அதிகாலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் கட்டிட தொழில் செய்து வருகிறார்.
இவரது வங்கிப்பணப்பரிவர்த்தனைக்கும், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை அவரிடம் இருந்து என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன? வேறு ஏதேனும் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கார் வெடிப்பு வழக்கு:
மேலும், கோவை, சென்னையில் நடைபெற்று வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் இதுவரை பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கரிக்காதோப்பு பகுதி மட்டுமின்றி ஏரவாடியிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கோவையில் கடந்தாண்டு அக்டோபர் 23-ந் தேதி நடைபெற்ற உக்கடம் அருகே கார் வெடித்த வழக்கில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, நடைபெற்ற விசாரணையில் ஜமேசா முபின் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்காக பயங்கரவாத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.