Minister Udhayanidhi Stalin : 'காலில் விழுந்து முதல்வரானவர் மீசையை பற்றி பேசுகிறார்..' : அமைச்சர் உதயநிதி பதில்..
அதிமுகவில் ஆட்சியில் அடிமையாக இருந்தவர்கள் இப்போது அடிமையாக இருக்கிறார்கள். காலில் விழுந்து முதல்வரானவர் மீசையை பற்றி பேசுகிறார் என்று ஈபிஎஸ்-க்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ கலைஞர் கருணாநிதி பேரன், பெரியாரின் பேரனுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன். கடந்த முறை இந்த தொகுதியில் போட்டியிட்ட திருமகன் 9000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்தீர்கள். இந்த முறை அவரது தந்தை ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முதலமைச்சர் முக ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி மற்றும் ராகுல் காந்தியின் அன்பை பெற்றவர்கள். நான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நான் முதல்முறையாக உங்களை சந்திக்க வந்துள்ளேன். இதே ஈரோடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓட்டு கேட்க வந்தால் விரட்டியடிப்பதாக கேள்விபட்டேன். அதை தொலைக்காட்சிகளிலும் பார்த்தேன். அந்த விரக்தியில்தான் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கே பிரச்சாரம் மேற்கொண்டபோது ஆம்பளையா என்று பேசியுள்ளார்.
தலைமை செயலகத்தில் சிபிஐ ரெய்டு வந்தபோதும் வாய்க்கு ஜிப்பாகவும், தூத்துக்குடியில் 13 உயிர்களை நெரிக்க கயிறாகவும் இருந்தது அவரது மீசை. 2 பெண்மணிகளின் செருப்படிக்கு பாலிஷ்போடும் பிரஷ் ஆக இருந்தது அவரது மீசை. இதனால்தான் எந்த பயனும் இல்லாத அந்த மீசையை தமிழ்நாட்டு மக்கள் ஒரே நாளில் மழுங்கடித்துவிட்டனர். ஐந்து முதல் ஆறு நாட்கள் ஷேவிங் செய்யாமல் இருந்தால் எல்லாருக்கும் வீசை வளர்ந்துவிடும். நீங்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டவரா? நீங்கள் எப்படி முதலமைச்சர் பதவியில் ஏறுனீர்கள் என்று எல்லாருக்கு தெரியும். அதிமுகவில் ஆட்சியில் அடிமையாக இருந்தவர்கள் இப்போது அடிமையாக இருக்கிறார்கள். காலில் விழுந்து முதல்வரானவர் மீசையை பற்றி பேசுகிறார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ ஒரு காலத்தில் அண்ணா ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்று சொன்னார். அதேபோல், சட்டசபையில் நிறைவேற்றிய 19 தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் ஆளுநர் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் அவர்களின் பிரச்சனைக்கு பிரதமர் மோடியை நாடி வருகின்றனர். என்றைக்காவது மக்கள் பிரச்சனையில் போயிருக்கிறார்களா? ஒருமுறை சட்டசபையில் இருந்து என் காரில் ஏற பழனிசாமி முயற்சி செய்தார். அந்த நேரத்தில் என் காரை தருகிறேன் எங்கு வேண்டுமானாலும் போங்கள் கமலாலயத்திற்கு மட்டும் போயிடாதீங்கன்னு சொன்னேன். இப்போது ஓபிஎஸ் மற்றும் எடப்பாடியும் மாறி மாறி தங்களுக்கு ஆதரவு வேண்டும் என்று கமலாலயம் போகிறார்கள்.” என்று தெரிவித்தார்.