Senthil Balaji: செந்தில்பாலாஜிக்காக கோரிக்கை வைத்த முதல்வர் - ஏற்றுக்கொண்ட ஆளுநர்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக, வழங்கிய கடிதத்தை ஏற்றதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக, வழங்கிய கடிதத்தை ஏற்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.
செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்ற ஆளுநர்:
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 12.2.2024 அன்று, தமிழ்நாடு அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள பரிந்துரைத்து எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அந்த பரிந்துரையை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் அங்கீகரித்து ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி:
பண மோசடி வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 13ஆம் தேதி கைது செய்யப்பட்டு செந்தில் பாலாஜி, சுமார் 6 மாதங்களுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும், அவர் இலாகா இல்லாத அமைச்சராக அமைச்சரவையில் நீடித்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். அவரது பரிந்துரையின் பேரில், ஆளுநர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக தற்போது அறிவித்துள்ளார்.
எதனால் கைது
திமுக அரசு கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியபோது, கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு கேபினட் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அவரது வசம் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஒப்படைக்கப்பட்டது. கடந்த 2011 முதல் 2016ஆம் ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த அதிமுக ஆட்சியின்போது 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துறையில் பணியாளர்களை பணியமர்த்தியபோது, அவர்களிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பலர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தரவில்லை எனவும், பணத்தையும் திருப்பித் தரவில்லை என்றும் கூறி செந்தில் பாலாஜி மீது நேரடியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு பல கட்டங்களைக் கடந்து அமலாக்கத்துறை வசம் வந்தது. அமலாக்கத்துறை அவரை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி பல முறை சம்மன் அனுப்பியும் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி நள்ளிரவில் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இதையடுத்து பலமுறை அவர் ஜாமின் மனு தாக்கல் செய்தாலும், மீண்டும் மீண்டும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அமைச்சரவையில் நீடிப்பதால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்கக் கூடும் எனவும் அமலாக்கத்துறை வாதாடி வந்தது. இந்நிலையில் தான், செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் தனக்கு விரைவில் ஜாமின் கிடைக்கும் என அவர் நம்புவதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,