Minister M Subramanian: செந்தில் பாலாஜியின் உடல்நிலை எப்படி உள்ளது? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு பேட்டி
அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது இன்னும் ஓரிரு நாட்களில் சிகிச்சை குறித்த முழுவிவரம் தெரிவிக்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது இன்னும் ஓரிரு நாட்களில் சிகிச்சை குறித்த முழுவிவரம் தெரிவிக்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
குடும்ப நலத்துறை விருது:
2020ம் ஆண்டு முதல் குடும்ப நலத்துறையில் மாநில அளவில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், இணை, துணை இயக்குநர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மற்றும் தாய் - சேய் நல மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வது குறித்தான விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டார். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் குடும்ப நலத்துறையில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.
மகப்பேறு மரணம்:
மேடையில் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், ” தமிழகத்தில் மக்கள் தொகை கட்டுப்பாடு 2031 - 36 ஆம் ஆண்டுகளில் கட்டுக்குள் வரும் என இந்திய புள்ளியல் தெரிவித்துள்ளது. ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகளில் total fertility rate replacement level 2.1யை விட குறைவாகவே உள்ளது.
2000 -ஆம் ஆண்டு ஒரு லட்சமாக இருந்த மகப்பேறு மரணம் 54 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. மகப்பேறு மரணம் கடந்த 20 ஆண்டுகளில் 4 ல் ஒரு பங்காக குறைக்கப்பட்டு உள்ளது. 1971ல் 1000 குழந்தைகளில் 113 குழந்தைகளுக்கு சிசு மரணம் இருந்த நிலையில் தற்போது அது 13 என்ற அளவில் குறைக்கப்பட்டு உள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நிரந்தரமாக குடும்ப நல அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்களின் எண்ணிக்கை 6,42,048. நிரந்தர குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஆண்களின் எண்ணிக்கை 2,535, தற்காலிக குடும்ப நல சாதனம் ஏற்ற பெண்கள் 10,99,940 பேர், தற்காலிக கருத்தடை ஊசி போட்டுக்கொண்டவர்கள் 1,67,216 பேர். குடும்ப நலத்துறை தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி உடல்நிலை:
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், “ இந்தியாவிலேயே கருவள விகிதம் கட்டுக்குள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். தமிழ்நாடு பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலமாக சுகாதாரத்துறையில் முன்னோடி மாநிலமாக உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இன்று அல்லது நாளை சிகிச்சை குறித்த முழு விவரம் தெரிவிக்கப்படும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் உடல் நிலை சீராக உள்ளது, அவருக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அறுவை சிகிச்சையா?
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கொழுப்பு கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை அகற்ற ராஜீகாந்தி அரசு மருத்துவமனையின் வயிறு மற்றும் குடல் அறுவை சிகிச்சை துறையின் மூத்த மருத்துவர்கள் இன்று காலை பரிசோதனை செய்தனர். அதன் அடிப்படையில் பித்தப்பையில் உள்ள கொழுப்பு கட்டியை அகற்ற தேவையான சிகிச்சைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தேவைப்படும் பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்வது குறித்தும் மருத்துவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
தலையில் மூளைக்கு செல்லும் நரம்பில் ரத்த கட்டு இருப்பது எம்ஆர்ஐ மற்றும் சிடி பரிசோதனைகளில் கடந்த வாரம் உறுதி செய்யப்பட்ட நிலையில், இதற்கான சிகிச்சைகள் குறித்து நரம்பியல் துறை மருத்துவர்கள் இன்று காலை பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.