Electricity Bill : விரைவில் மாதாந்திர கணக்கீடு எடுக்கப்பட்டு மின்கட்டணம் வசூலிக்கப்படும்.. அமைச்சர் செந்தில் பாலாஜி..
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஸ்மார்ட் மீட்டர் பொறுத்திய பின் விரைவில் மாதாந்திர கணக்கீடு எடுக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்.27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி தரப்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் இன்று காலை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ”பொதுமக்கள் கை சின்னத்திற்கு வாக்களிக்க உற்சாகத்தோடு இருக்கிறார்கள். செல்லும் இடங்களில் மக்கள் உற்சாகத்தோடு வரவேற்பு அளிக்கிறார்கள். முதலமைச்சரின் கடந்த ஒன்றரை ஆண்டு கால சாதனையாக கைச்சின்னம் மாபெரும் வெற்றி பெறும்.
மேற்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பது தவறான கருத்து.. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் கூட நடத்த முடியாத ஒரு நிலை இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதிமுக.வின் கோட்டை என்பது தவறு இது திமுகவின் எக்குகோட்டை பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.
அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “பா.ஜ.க கட்சியில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை அண்ணாமலையிடம் கேளுங்கள். பாஜக ஒரு மிஸ்டு கால் பார்ட்டி” எனக் கூறினார்.
பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி. இல்லாத ஒரு நபரை இருப்பதைப் போல் காட்டி அவருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். அவர்களை மையப்படுத்தி தேர்தல் நடப்பது போன்ற சூழலை உருவாக்குகின்றனர்.
தொடர்ந்து பேசிய அவர், “மின்சார கட்டணம் கணக்கீடு செய்வதில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதை பொறுத்திய பின் விரைவில் மாதாந்திர கணக்கீடு எடுக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும்.
விசைத்தறி இந்த பகுதியில் மிக அதிகமாக இருக்கிறது. அதிமுக கடந்த பத்து ஆண்டு காலத்தில் மின் கட்டணம் ஏற்றாததை போல் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றனர். 2010ல் இருந்த மின்கட்டனத்தை விட கூடுதலாக அதிமுக ஆட்சியில் 117 விழுக்காடு உயர்த்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் வீடுகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
விசைத்தறிகளுக்கு அதிமுக ஆட்சியில் 120 விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது. விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் விரைவில் 1000 யூனிட் ஆக உயர்த்தப்படும்” என தெரிவித்தார்.