சேலத்தில் முதல்கட்டமாக 54 அரசு துவக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் - அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்
மாநகராட்சியில் உள்ள 54 அரசு துவக்க பள்ளிகளில் இத்திட்டம் இன்று துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5,719 மாணவ மாணவிகள் பயன் பெறுகின்றனர்.
சேலத்தில் முதல்கட்டமாக 54 அரசு துவக்க பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார். தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் காலை உணவு திட்டத்தை அறிவித்தார். அதன்படி இத்திட்டத்தை நேற்றைய தினம் மதுரையில் அவர் துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக மாநகராட்சியில் உள்ள 54 அரசு துவக்க பள்ளிகளில் இத்திட்டம் இன்று துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5,719 மாணவ மாணவிகள் பயன் பெறுகின்றனர். இத்திட்டத்தினை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்து பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி சாப்பிட்டார். முன்னதாக இத்திட்டத்திற்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள உணவு சமையல் கூடத்தை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உடன் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், அருள், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர். அதன்பின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நீதிகட்சி காலத்தில் துவங்கிய மதிய உணவு திட்டம் காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை உருவாக்கி வருகிறது. பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை அனைத்து இடத்திற்கும் கொண்டு சென்றார். மேலும் மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக இருக்க வேண்டும் என்று பெயரை எம்ஜிஆர் கொடுத்தார். கலைஞர் கருணாநிதி ஐந்து நாட்களுக்கு முட்டை, வாழைப்பழம் உள்ளிட்ட உணவுகளை மத்திய உணவுடன் சேர்த்து வழங்கினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை உணவு வழங்க வேண்டும், மாணவர்கள் பட்டினியாக வந்து பாடம் பயிலும்நிலை இருப்பதால் இதைபோக்க சட்டமன்றத்தில் அறிவித்து மதுரையில் நேற்று துவக்கி வைத்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் அமைச்சர்கள் துவக்கி வைக்க உத்தரவிட்டுள்ளார். இந்த சத்துணவு திட்டம் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த உணவுமுறையில் உப்புமா, கிச்சிடி, இனிப்பு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதை மிகவும் சுவையாக உள்ளது. குறிப்பாக கிராமப்புறத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் உணவுக் கொள்ளாமல் பயில்வதற்கு செல்கின்றனர். உணவு உட்கொள்ளாமல் படிக்க சென்றால் படிப்பு ஏறாது. இதை மாற்றவே காலை உணவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
அரசு பணிகள் கட்டுமான பணிகள் எல்லாமே இந்து முறைப்படியே துவங்கப்படுவது என்பது குறித்த கேள்விக்கு, எல்லாம் முறைப்படி தான் செய்கிறது அதன் பெயர் திராவிட முறை, எந்த மதத்தையும் பின்பற்றவில்லை திராவிட முறைப்படி தான் செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் கூறியபடி எல்லோரும் சமமாக இருக்க வேண்டும், அனைத்து மதத்தினரும் , ஜாதியினரும் ஒன்றாக நடத்த வேண்டும் என்பதே திராவிடம் மாடல். இதை முதல்வர் நேற்று தெளிவாக அறிவித்துள்ளார். மதப் பிரச்சினைகள் எதுவும் கிடையாது திராவிட மாடலை ஒட்டி எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பிடிக்கும்படி திட்டத்தை தான் உருவாக்கியுள்ளதாக முதல்வர் கூறியுள்ளார் என்றார்.