சேறு.. பேனர் கிழிப்பு! - அமைச்சருக்கு தலைவலி! - என்ன செய்யப்போகிறது திமுக தலைமை?
ஃபெஞ்சல் புயலால் விழுப்புரத்தில் வீடுகளிலும் விளைநிலங்களிலும் வெள்ளம் சூழ்ந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரத்தில் நேற்று அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட நிலையில் இன்று அவருக்காக வைக்கப்பட்ட பேனரை மக்கள் கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஃபெஞ்சல் புயலால் விழுப்புரத்தில் வீடுகளிலும் விளைநிலங்களிலும் வெள்ளம் சூழ்ந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரத்தில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வடியாததால் உணவு இல்லாமல், தண்ணீர் இல்லாமல் மக்கள் தவிக்கும் சூழலும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால் உணவு, தண்ணீர் கேட்டு இருவேல்பட்டு கிராம மக்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருவேல்பட்டு பகுதிக்கு சென்ற அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, விழுப்புரம் கலெக்டர் பழனி உள்ளிட்டோர் மீது மக்கள் ஆத்திரத்தில் சேற்றை வாரி இறைத்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையடுத்து அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்தது பொதுமக்கள் இல்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. மேலும் சேற்றை வாரி இறைத்த ராமர் என்கிற ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ராமகிருஷ்ணனின் சித்தி விஜயராணி என்பவர் பாஜகவில் உள்ளார் என்பதும் அதன் காரணமாக ராமகிருஷ்ணன் பாஜக அனுதாபியாக செயல்பட்டு வருகிறார் எனவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து அமைச்சர் பொன்முடி பேசுகையில் “வேண்டும் என்றே அரசியலாக்குவதற்காக சிலர் என் மீது சேற்றை வாரி அடித்துள்ளனர். சேறு வீச்சு சம்பவத்தை பெரிதுபடுத்தி அரசியல் செய்ய விரும்பவில்லை” எனக் குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், விழுப்புரத்தில் சராசரியாக 55 செமீ மழை பெய்துள்ளது. 67 நிவாரண முகாம்களில் 4,906 பேர் தங்கியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் மழைக்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரணம் வழங்கப்படும். 80 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் சேதமாகியுள்ளன.
கணக்கெடுக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. இனி வரும் காலங்களில் தண்ணீர் தேங்காத அளவுக்கு திட்டமிடப்படும். அரசியல் செய்வதற்கு என் பின்புறம் சேற்றை வாரி வீசியுள்ளனர். இதுகுறித்து எக்ஸ் தளத்ஹ்டில் யார் பதிவிட்டுள்ளாரோ அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என உங்களுக்கே தெரியும். என் மேல் மட்டும் சேறு படவில்லை. உடன் வந்த கலெக்டர் உள்ளிட்ட அனைவர் மீதும் தான் சேறு பட்டது. அதை பெரிதாக்கி அரசியல் செய்ய விரும்பவில்லை.
இழப்பீடு ரூ.6000 கொடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசிடம் பேசி கூடுதல் நிதி பெற்றுத்தர வேண்டும்” என குறிபிட்டிருந்தார்.
இந்தநிலையில் திருவெண்ணைநல்லூர் - திருக்கோவிலூர் சந்திப்பில் திமுக சார்பில் அமைச்சர் பொன்முடிக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை சிலர் ஒன்றுகூடி கிழித்து எரிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே சேறு அடித்த சம்பவம் குறித்து பேசிய இயக்குநர் தங்கர் பச்சான், “அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்தது நியாயப்படுத்தவில்லை. ஆனால் அது மக்கள் கோபத்தின் வெளிப்பாடு. சேற்றை வாரி இறைத்தவர்கள் மண்ணில் உழைத்த விவசாயியாகத்தான் இருப்பார்” எனத் தெரிவித்தார்.
அமைச்சர் பொன்முடிக்கு விழுப்புரம் மக்களால் அடுத்தடுத்து ஏற்படும் தலைவலியை தீர்க்க திமுக தலைமை என்ன செய்யப்போகிறது என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

