கொல்லும் கள்ளச்சாராயம்: மெத்தனாலை கட்டுப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்படும் மெத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
![கொல்லும் கள்ளச்சாராயம்: மெத்தனாலை கட்டுப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் Minister Ma Subramanian steps will be taken control the use of methanol make spurious liquor. கொல்லும் கள்ளச்சாராயம்: மெத்தனாலை கட்டுப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/16/ff8726768376984a65a1467ff0470d711684221660355333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கள்ளச்சாராயம் தயாரிக்க பயன்படுத்தப்படும் ,மெத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தேசிய டெங்கு தினத்தையொட்டி டெங்கு ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மரு. எழிலன் மற்றும் மருத்துவத் துறை உயர் அலுவலர்கள், மருத்துவர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஆகியோரும் பங்கேற்றனர். அவர்களுடன் இணைந்து டெங்கு ஒழிப்பு உறுதிமொழியை அமைச்சர் எடுத்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, கொசு ஒழிப்பு பணியில் தீவிரமான செயல்பட்ட பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்,
"தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக உள்ளாட்சி ஆகிய துறைகளுடன் இணைந்து மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் டெங்கு ஒழிப்புக்காக டெங்குவை பரப்பும் கொசுக்களை அழிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப் பட்டுள்ளன. அதனால் முந்தைய காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை விட கடந்த ஆண்டு டெங்கு, மலேரியா ஆகிய பாதிப்புகள் குறைந்துள்ளன.
டெங்கு பாதிப்பை உறுதிசெய்ய கடந்த ஆண்டு 1,07,350 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 2426 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நாள்தோறும் ஒன்று, இரண்டு என்கிற அளவில் மட்டுமே பதிப்புகள் உறுதிசெய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொசு ஒழிப்பு பணியில் 22,00 பணியாளர்கள் உள்ளனர். புகைமருந்து அடிக்கும் மிசின்கள் 1,158, சிறிய மிசின்கள் 7,213, மிகச்சிறிய புகை அடிப்பன்கள் 7,634 என்கிற அளவில் பயன்பாட்டில் உள்ளன. மேலும் மருந்துகளும் தேவையான அளவில் உள்ளன. கடந்த ஆண்டைப் போல வரும் ஆண்டிலும் டெங்குவை பரப்பும் கொசுக்களை ஒழிக்க தீவிரமான பணியில் ஈடுபட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.
கொரோனா பாதிப்பு குறித்து பேசிய அமைச்சர்,
"தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு மிகப்பெரிய அளவில் கட்டுக்குள் வந்து, கிட்டத்தட்ட கொரோனா பாதிப்பு இல்லை என்கிற நிலையே உருவாகி உள்ளது. தினசரி பாதிப்பை எடுத்துக் கொண்டால் நேற்றைக்கு 16 பேருக்கு தான் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. அதுவும் இன்றைக்கு ஒற்றை இலக்கத்தில் தான் பதிவாகும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.
விழுப்புரம் மாவட்ட கள்ளச்சாராய விவகாரம் குறித்த கேள்விக்கு,
"கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 66 பேர் தற்போது விழுப்புரம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் ஆகிய மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். கள்ளச்சாராயம் அருந்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் , மேலும் 66 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதில் 55 முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் திண்டிவனம் மற்றும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 5 பேரும புதுவை தனியார் மருத்துவமனையில் ஒருவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முதலமைச்சர் அவர்கள் நேரில் ஆய்வு செய்துள்ள நிலையில், இன்று நான் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளேன். அங்கு தான் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கள்ள சாராயம் குடித்து மருத்துவமனையில் இருப்போருக்கு உரிய முறையில் சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்ய சிறப்பு அலுவலரை நியமிக்க உள்ளோம்" என்றார். மேலும் மெத்தனால் வேதிப்பொருள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)