‛அடுத்த அரை நூற்றாண்டிற்கு நம்மை காக்கும் இளம் தலைவர் உதயநிதி’ சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சு., பேச்சு!
ஒரு இளம் தலைவர் அதிலும் தமிழகத்தைக் காக்கும் தலைவரான உதயநிதி அரசியலுக்கு வருவேன் என அறிவித்ததால், சைதாப்பேட்டை பெருமிதம் கொள்கிறது என புகழ்பாடினார் அமைச்சர் மா.சு.,
தமிழகத்தை இன்னும் அரைநூற்றாண்டிற்கும் காக்கப்போகும் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தான் எனவும், அவர் அரசியலுக்கு வருவேன் என சைதாப்பேட்டையில் அறிவித்ததை பெருமையாகக் கருதுகிறேன் என சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று சட்டசபையில் பேசிய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கியமாக தமிழகத்தின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றான சித்த மருத்துவத்தைக் காக்கவும், அதன் மகத்துவத்தைப்போற்றும் வகையிலும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட சித்த மருத்துவத்துக்கென தனிப்பல்கலைக்கழகம் இந்தியாவில் முதல் முறையாக சென்னைக்கு அருகில் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
இதில் இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய அனைத்தும் அடங்கியிருக்கும் எனவும்அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டசபையில் தெரிவித்தாார். ஆனால் சட்டசபையில் இதற்கு முன்னதாக உதயநிதியை புகழ்ந்து பேசியது பெரும் வாதப்பொருளாக மாறியுள்ளது. அப்படி அவர் என்ன பேசினார் தெரியுமா? தமிழகத்தை நல்ல நிலைக்குக்கொண்டு வந்து அடுத்த அரைநூற்றாண்டிற்கு காக்கப்போகும் இளம் தலைவர் உதயா தான் என மா.சு கூறியிருந்தார்.
மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கோலப்பேட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுக்கொடுப்பதாக நான் அழைத்துச்சென்றேன் எனவும், அப்போது மக்கள் அவர் மீது காட்டிய அன்பு அளப்பெரிதாக இருந்தது. அப்போது கூறினேன்… “உதயா நீங்கள் மேடையை விட்டு இறங்குவதற்கு முன்னதாக அரசியலில் ஈடுபடுவேன் என மக்களிடம் கூறுங்கள் என தெரிவித்ததாக மா.சு கூறினார். ஆனால் நான் அதற்கு முன்னதாகவே அரசியலுக்கு வருவேன் என்று முடிவெடுத்துவிட்டதாக மேடையில் உதயா கூறிவிட்டார். எனவே ஒரு இளம் தலைவர் அதிலும் தமிழகத்தைக்காக்கும் தலைவரான உதயநிதி அரசியலுக்கு வருவேன் என அறிவித்த சைதாப்பேட்டை பெருமிதம் கொள்கிறது என புகழ்பாடினார்.
இது மட்டுமின்றி நீட் தேர்விற்கு எதிரான கண்டன உண்ணாவிரதம், சட்டசபையில் தலைவர் ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு எதிரான போராட்டம் என பல இடங்களுக்கு உதயநிதி வந்தப்பொழுதெல்லாம் மக்கள் அவர் மீது அதீத அன்பு, ஈர்ப்பு, பாசம் கொண்டிருந்தார்கள் எனவும் தமிழகத்தை காக்கப்போகும் இளம் தலைவர் உதயநிதியின் தான் என சட்டசபையில் பெருமிதம் கொண்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
ஆனால் சட்டச்சபையில் அமைச்சர் பேசியதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர். அதே வேளையில் நிச்சயம் தமிழகத்தைக் காக்கப்போகும் தலைவர் உதயநிதி தான் எனவும் ஆதரவு கருத்துக்களும் பகிரப்பட்டுவருகிறது.