தமிழகத்தில் புதிதாக 100 அமுதம் அங்காடிகள் திறக்க அரசு திட்டம் - அமைச்சர் சக்கரபாணி தகவல்
கரூர் மாவட்டத்தில் புதிதாக 53 ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. செந்தில் பாலாஜி பொறுப்பு அமைச்சராக உள்ள கோவை மாவட்டத்தில் 100 ரேஷன் கடைகள் ஒரே நாளில் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பது பெருமையளிக்கிறது.

தமிழகத்தில் புதிதாக 100 அமுதம் அங்காடிகள் திறக்க அரசு திட்டம் என உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், “கடந்த மூன்று ஆண்டுகளில் கரூர் மாவட்டத்தில் புதிதாக 53 முழு நேர மற்றும் பகுதிநேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைப்படும் இடங்களில் புதிய முழு நேர மற்றும் பகுதிநேர ரேஷன் கடைகள் திறக்க அரசு அனுமதி வழங்க தயாராக உள்ளது” என்றார்.
உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், “கடந்த 45 மாத கால திமுக ஆட்சியில் தமிழகத்தில் புதிதாக 17.50 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 5264 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் புதிதாக 53 ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. செந்தில்பாலாஜி பொறுப்பு அமைச்சராக உள்ள கோவை மாவட்டத்தில் 100 ரேஷன் கடைகள் ஒரே நாளில் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பது பெருமையளிக்கிறது. தமிழகம் முழுவதும் 2500 முழு நேர மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டத்தில் 639 ரேஷன் கடைகள் மூலம் 3 லட்சத்து 38 ஆயிரத்து 198 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நெல் குவிட்டாலுக்கு, சன்ன ரகத்திற்கு 1,960 ரூபாய், பொது ரகத்திற்கு 1,905 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இது 2,450 ரூபாயாக வழங்கப்பட்டு வருகிறது. இது தேர்தலில் அளித்த வாக்குறுதி படி வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 2,500 ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
தமிழகம் முழுக்க 103 திறந்த வெளி சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இவற்றில் தார்ப்பாய் மூலம் நெல்களை பாதுகாக்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு நெல்மணி கூட மழையில் நனைந்து வீணாக கூடாது என்பதற்காக ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டு செமி கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நெல்கள் மழையில் நனைவது தடுக்கப்படும். தமிழகத்தில் 376 அரவை ஆலைகள் மூலம் நெல் அரைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தற்போது 700 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாதத்திற்கு ரேஷன் கடைகள் மூலம் 3.76 லட்சம் மெட்ரிக் டன் அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை தலைவராக கொண்டு ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதற்கு அனுமதி வழங்கலாம்.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தில் அரிசி 3.76 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைப்படுகிறது. ஆனால், நமது மாநிலத்தில் உற்பத்தி போதுமானதாக இல்லை. இதனால், வெளிமாநிலத்தில் இருந்து அரிசி விலை கொடுத்து வாங்கி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 100 அமுதம் அங்காடிகள் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 1,000 முதல் ரூ. 1,500 வரை சேமிப்பு ஏற்படும் என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

