(Source: ECI/ABP News/ABP Majha)
Milk Adulteration: பால் கலப்படத்தை 30 வினாடிகளிலேயே கண்டறியக்கூடிய கருவி... ஐஐடி மெட்ராஸ் அசத்தல்...
Milk adulteration: ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், பால் கலப்படத்தை முப்பதே வினாடிகளில் கண்டறியக்கூடிய குறைந்த செலவிலான கருவியை உருவாக்கி உள்ளனர்.
கலப்படமான பாலை அருந்துவதை தவிர்க்கும் வகையில், வீடுகளிலேயே எளிதாக கலப்பட பாலை கண்டறிய வகையிலும், எளிதாக பயன்படுத்தும் வகையிலுமான 3டி காகித அடிப்படையிலான கையடக்கக் கருவியை ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஐஐடி மெட்ராஸ் கண்டுபிடிப்பு:
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள், பால் கலப்படத்தை 30 வினாடிகளுக்குள் கண்டறியும் வகையில் முப்பரிமாண (3டி) காகித அடிப்படையிலான கையடக்க சாதனம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த பரிசோதனையை நம் வீடுகளிலேயே செய்து பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூரியா, சலவை சோப்பு, சோப்பு, ஸ்டார்ச், ஹைட்ரஜன் பெராக்சைடு, சோடியம்-ஹைட்ரஜன்-கார்பனேட், உப்பு உள்ளிட்டவைகள் கலப்பட பொருளாக பாலில் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த கலப்பட பொருட்களை, இந்த கருவி மூலம் எளிதாக கண்டறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலின் தூய்மையைக் கண்டறியும் வழக்கமான ஆய்வக அடிப்படையிலான பரிசோதனைக்கு கூடுதல் செலவும், நேரமும் ஏற்படுகிறது. ஆனால், இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டு உள்ள, இந்தக் கருவியின் மூலம் எளிதாகவும் விரைவாகவும் கண்டறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் மட்டுமில்லை:
பால் மட்டுமன்றி குடிநீர், பழச்சாறு, மில்க் ஷேக் போன்றவற்றிலும் கலப்படம் ஏதேனும் உள்ளதா என பரிசோதனை செய்ய முடியுமாம். இந்த திரவங்களில் கலப்படத்தை சோதிக்க, ஒரேயொரு மில்லி லிட்டர் மாதிரியே போதுமானது.
கலப்படம் அதிகரிப்பு:
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு பால் மிக முக்கிய உணவுகளில் ஒன்றாகும். ஆனால் அதுதான் உலகிலேயே அதிக கலப்பட உணவுப் பொருளாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், சீனா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளில் பாலில் கலப்படம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கலப்படப் பாலை அருந்துவதால் சிறுநீரகப் பிரச்சனைகள், சிசுக்கள் உயிரிழப்பு, இரைப்பை குடல் அழற்சி, வயிற்றுப் போக்கு போன்ற மருத்துவப் பிரச்சனைகள் ஏற்படலாம் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐஐடி மெட்ராஸ்-ன் கண்டுபிடிப்பு பெரிதும் உதவும் என கருதப்படுகிறது.
ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறை இணைப் பேராசிரியரான டாக்டர் பல்லப் சின்ஹா மஹாபாத்ரா தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், ஆராய்ச்சியாளர்களான சுபாஷிஸ் பட்டரி, டாக்டர் பிரியங்கன் தத்தா ஆகியோரும் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
அவர்கள் இணைந்து தயாரித்த ஆய்வுக் கட்டுரை, மதிப்பாய்வு இதழான நேச்சரில் வெளியிடப்பட்டு உள்ளது
இக்கருவியின் செயல்பாட்டை விவரித்த ஐஐடி மெட்ராஸ் இயந்திர பொறியியல் துறையின் இணை பேராசிரியரான டாக்டர் பல்லப் சின்ஹா மஹாபாத்ரா கூறும்போது,
"3டி காகித அடிப்படையிலான இந்த நுண்திரவக் கருவி (microfluidic device), மேல் மற்றும் கீழ் உறைகளையும், சாண்ட்விச் அமைப்பிலான நடுத்தர அடுக்கையும் கொண்டதாகும்.
அடர்த்தியான திரவத்தையும், சீரான வேகத்தில் கொண்டு செல்லும் பணியை 3டி வடிவமைப்பு செய்கிறது. காகிதம் ரீ ஏஜெண்ட்களுடன் வினைபுரிந்து உலர வைக்கிறது.
இரு காகித அடுக்குகளும் உலர்ந்தபின், இரு பக்கங்களிலும் ஒட்டிக் கொள்வதுடன், உறைகளும் இருபக்க டேப்புடன் ஒட்டிக் கொள்கின்றன. இந்த வடிவமைப்பில் நான்காம் கிரேடு வாட்மேன் ஃபில்டர் பேப்பர் பயன்படுத்தப்படுவதால், திரவ ஓட்டத்திற்கு உதவுவதுடன், ரீஏஜெண்ட்களை அதிகளவில் சேமித்துக் கொள்ள வைக்கிறது" எனக் குறிப்பிட்டார்.
Image Credits: PIB
டாக்டர் பல்லப் சின்ஹா மஹாபாத்ரா மேலும் கூறும்போது,"அனைத்து ரீஏஜெண்ட்களும் காய்ச்சி வடிகட்டிய நீர் (distilled water) அல்லது எத்தனாலுடன் கரையும் தன்மைக்கேற்ப கரைந்துவிடுகின்றன. நிறமானிக் கண்டறிதல் நுட்பங்களைப் பயன்படுத்தி, கலப்படப் பொருட்கள் அனைத்தும் வெவ்வேறு திரவ மாதிரிகளால் கண்டறியப்படுகின்றன.
குறிப்பிட்ட கலப்படத்துடன் மட்டுமே வினைபுரியும் ரீஏஜெண்ட், எந்த பால் மூலப்பொருளுடனும் வினைபுரிவதில்லை என்பதை நம்மால் அனுமானிக்க முடியும். ஆகையால், திரவ உணவின் பாதுகாப்பையும், இந்தப் பகுப்பாய்வுக் கருவியால் கண்காணிக்கலாம். குறிப்பாக வளரும் நாடுகளின் தொலைதூரப் பகுதிகளில் கலப்படப் பாலை கண்டறிவது அதிகரிக்கும்" என்றார்.