Michaelpatti Village Petition | மதம் மாறச்சொன்னதாக கூறச்சொல்லி நிர்பந்திக்கின்றனர் - மைக்கேல்பட்டி கிராம மக்கள்
பள்ளி நிர்வாகம் மதம் மாற சொன்னதாக கூறுமாறு ஊருக்குள் வந்து எங்களை சிலர் நிர்பந்திக்கின்றனர். நாங்கள் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறோம் - மைக்கேல்பட்டி கிராம மக்கள்
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து மாணவியை அதிக வேலை வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக விடுதிக் காப்பாளர் சகாயமேரியை கைது செய்தனர்.
ஆனால், விடுதிக் காப்பாளர் உள்ளிட்டோர் மதம் மாறுமாறு வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்துகொண்டார் என பெற்றோர் புகார் எழுப்பினர். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாணவியின் தந்தை மனுத் தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம் தஞ்சாவூர் மாவட்ட நீதிபதியால் நியமிக்கப்படும் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் பெற்றோர் ஆஜராகி தங்களது வாக்குமூலத்தைத் தெரிவிக்கலாம் என உத்தரவிட்டது.
அதன்படி, தஞ்சாவூர் மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சி. பாரதி முன்னிலையில் மாணவியின் தந்தை மற்றும் சித்தி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இந்த வாக்குமூல அறிக்கை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, பிளஸ்- 2 மாணவி பேசியதாக கூறப்படும் வீடியோ பதிவை தஞ்சாவூர் வல்லம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, வீடியோ பதிவு கொண்ட செல்போனை தஞ்சாவூர் வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். பிருந்தாவிடம் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அரியலூர் மாவட்டச் செயலர் பி.முத்துவேல் ஒப்படைத்தார்
இதற்கிடையே, மாணவி தற்கொலை விவகாரத்தில் இரண்டு நிமிடம் 24 வினாடிகள் கொண்ட புதிதாக வெளியான வீடியோவில், விடுதி வார்டனின் கூடுதல் பணியால்தான் தனது படிப்பில் பின் தங்கியதாகவும், இதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் மாணவி கூறுகிறார். மேலும் மாணவி இறப்பதற்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாவட்ட செயலாளர் அரியலூரைச் சேர்ந்த முத்துவேல் என்பவர் வீடியோ எடுத்துள்ளார்.
தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாற சொன்னதாக, மாணவி கூறிய வீடியோவால் தமிழ்நாட்டில் சர்ச்சை கிளம்பியது. ஆனால், சமீபத்தில் வெளியான புதிய வீடியோவில், மாணவி மதமாற்றம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மைக்கேல்பட்டி கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், “எங்கள் கிராமத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது.
பள்ளி நிர்வாகம் மதம் மாற சொன்னதாக கூறுமாறு ஊருக்குள் வந்து எங்களை சிலர் நிர்பந்திக்கின்றனர். நாங்கள் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறோம். எங்களது பிள்ளைகளும் அந்தப் பள்ளியில்தான் படித்தனர். அந்தப் பள்ளியில் மதமாற்றம் என்பதே இல்லை. இந்த விவகாரத்தில் யாரும் எங்கள் பகுதிக்கு வர தடை விதிக்க வேண்டும். மதமாற்றம் என்ற பேச்சுக்கே எங்களிடம் இடமில்லை” என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்