Mettur Dam: வாரத்தின் முதல் நாளில் அதிகரிக்க தொடங்கிய மேட்டூர் அணையின் நீர்வரத்து - இன்றைய நீர் நிலவரம்
மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 70,500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
![Mettur Dam: வாரத்தின் முதல் நாளில் அதிகரிக்க தொடங்கிய மேட்டூர் அணையின் நீர்வரத்து - இன்றைய நீர் நிலவரம் Mettur Dam's inflow started increasing on the first day of the week - Today's water situation. Mettur Dam: வாரத்தின் முதல் நாளில் அதிகரிக்க தொடங்கிய மேட்டூர் அணையின் நீர்வரத்து - இன்றைய நீர் நிலவரம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/05/7430ee757122e0eb551e43fe322710661722825705725113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அன்புள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,10,000 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 70,000 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 73,330 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்மட்டம்:
அணையின் நீர் மட்டம் 120.10 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.63 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 21,500 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 48,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 70,500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகள்:
கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 20,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 19,250 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)