Virudhunagar Seat: தென் மாவட்ட தொகுதியை குறிவைக்கும் வைகோவின் மகன்..விட்டுத்தருமா காங்கிரஸ்? திமுக கூட்டணியில் சலசலப்பு
இந்த தொகுதியை கேட்டு பெற, மதிமுக முயற்சி செய்து வருவதாக அக்கட்சியின் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால், இதே தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான தேர்தல் களம் ஏற்கனவே சூடி பிடிக்க தொடங்கியுள்ளது. தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளை திமுக, அதிமுக கட்சிகள் தொடங்கியுள்ளன.
சூடுபிடிக்கும் தேர்தல் களம்:
அதிமுக கூட்டணியில் கூட்டணி பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறிப்பாக, இந்த கூட்டணியில் இடம்பெற்றுள் பாஜக, இந்த முறை தமிழ்நாட்டில் அதிக கவனம் செலுத்தும் என கூறப்படுகிறது. அந்த வகையில், தென் சென்னை, கோவை, நீலகரி உள்ளிட்ட 9 தொகுதிகளை குறிவைத்து வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கி, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என வியூகம் அமைத்து வருகிறது. ஆனால், காங்கிரஸ், மதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தென் மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியை குறி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் தொகுதியை குறிவைக்கும் வைகோ மகன்:
அது வேறு எந்த தொகுதியும் இல்லை காமராஜரின் சொந்த ஊரான விருதுநகர்தான். இந்த தொகுதியை கேட்டு பெற, மதிமுக முயற்சி செய்து வருவதாக அக்கட்சியின் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால், இதே தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் கிழக்கு மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வரும் 2024 தேர்தலிலும், விருதுநகர் தொகுதியை தக்க வைக்க கட்சி தலைமையிடம் கோரிக்கை விடுத்து விருதுநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற் குழு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால், விருதுநகர் தொகுதியில் வைகோவின் மகனும் மதிமுக தலைமை கழக செயலாளருமான துரை வைகோவை களமிறக்க அக்கட்சி திட்டமிட்டு வருவதாகவும் அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதுகுறித்து மதிமுக நிர்வாக ஒருவர் கூறுகையில், "விருதுநகர் தொகுதியில் துரை வைகோவை போட்டியிட வைக்க கட்சி தொண்டர்கள் விரும்புகின்றனர். ஆனால், இதுகுறித்து திமுகவிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
விட்டு தருமா காங்கிரஸ்?
கடந்த ஜனவரி மாதம் நடந்த மதிமுக கூட்டத்தில், "மக்களவை தேர்தலில் போட்டியிட துரை வைகோவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கட்சி தொண்டர்கள் முடிவு செய்தனர்". தற்போது இந்த தொகுதி காங்கிரஸ் வசம் உள்ளது. இதுகுறித்து விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மாணிக்கம் தாகூர் கூறுகையில், "கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையின் போது விருதுநகர் தொகுதி தொடர்பான முடிவு எடுக்கப்படும்" என்றார்.
தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு, விருதுநகர் மக்களவை தொகுதியின் கீழ் வரும் பகுதிகளை உள்ளடக்கிய சிவகாசி தொகுதியில் நடத்தப்பட்ட தேர்தலில் வைகோ இரண்டு முறை வெற்றிபெற்றுள்ளார். 1998 மற்றும் 1999 தேர்தல்களில் வைகோ வென்ற நிலையில், 2004ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மதிமுக வேட்பாளர் ரவிசந்திரன் வெற்றிபெற்றார்.
தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, விருதுநகர் தொகுதியாக மாற்றப்பட்டதை தொடர்ந்து, 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் அத்தொகுதியை கைப்பற்றியது. அப்போது, புது முகமாக களமிறக்கப்பட்ட மாணிக்கும் தாகூர், வைகோவை தோற்கடித்து வெற்றிபெற்றார். கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், இரண்டு பேரையும் அதிமுக வேட்பாளர் டி. ராதாகிருஷ்ணன் தோற்கடித்தார்.