Rangoli Kolam: கோலங்கள்! கோலங்கள்! வாசல் எல்லாம் வண்ண வண்ண ரங்கோலி! மயக்கும் மாட்டுப்பொங்கல்!
Rangoli Kolam: மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மக்கள் தங்கள் வீடுகளின் வாசலில் ரங்கோலி கோலம், புள்ளி வைத்த கோலங்கள் என வண்ண வண்ண கோலங்களை இட்டு அசத்தி வருகின்றனர்.
தமிழர்களின் மிகப்பெரிய பண்டிகையாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல் பண்டிகை ஆகும். தை மாத முதல் நாள் தமிழர்களின் அறுவடை நாளாக பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் உழவுக்கும், உணவுக்கும் உறுதுணையாக நிற்கும் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை போற்றும் விதமாக மாட்டுப் பொங்கலாக கொண்டாடப்படுகிறது.
ரங்கோலி கோலங்கள்
அந்த காலத்தில் விவசாயத்திற்கு நிலம் மாடுகளின் மீது ஏர் பூட்டியே உழப்பட்டது. அதன் காரணமாகவும் மாடுகளையும் தங்கள் குடும்பத்தில் ஒருவராக மக்கள் நினைப்பதாலும் இந்த மாட்டுப் பொங்கலை மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மக்கள் வீடுகளில் உள்ள மாடுகளை காலையிலே குளிப்பாட்டி, சந்தனம், குங்குமம் வைத்து பூஜை செய்துள்ளனர்.
மேலும் வீடுகளின் வாசலில் கோலம் போட்டு அசத்தி வருகின்றனர். தைத் திருநாளான நேற்று முதலே வீட்டின் வாசலில் பெண்கள் வண்ண வண்ண கோலங்கள் இட்டு அசத்தி வருகின்றனர். குறிப்பாக, புள்ளி வைத்த கோலங்களுக்கு நிகராக ரங்கோலி கோலங்களை இட்டும் அசத்தி வருகின்றனர்.
வண்ணமயமான வாசல்கள்:
இதற்காக இணையங்களில் இருந்து பல வகையான ரங்கோலி கோலங்களின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து வீட்டின் வாசல்களை வண்ண வண்ண ரங்கோலி கோலங்களால் அசத்தி வருகின்றனர். வீடுகளின் வாசல்களை கோலங்களால் மக்கள் அசத்தி வருவதால் கடந்த இரு தினங்களாக கடைகளில் கோலப் பொடிகளின் விற்பனை சக்கைப் போடு போட்டு வருகிறது.
மேலும், கிராமப்புறங்களில் இன்று பெண்களுக்கு என்று பிரத்யேகமாக கோலப்போட்டிகள் நடக்கும். இதில் ஏராளமான பெண்கள் ஆர்வமாக பங்கேற்பதும் வழக்கம். இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காகவும் பல பெண்கள் ரங்கோலி கோலங்களை தங்கள் வீடுகளின் வாசலில் இட்டு பயிற்சி எடுத்து வருகின்றனர்.
விதவிதமான வண்ணங்களில் வீடுகளின் வாசலில் கோலங்களால் மக்கள் அலங்கரித்திருப்பது பார்ப்பதற்கே ரம்மியமாக உள்ளது.