எந்த ஒரு செயலிலும் லட்சியம் இருக்க வேண்டும் - மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி ஆண்டு விழாவிற்கு மணிப்பூர் மாநில உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் வருகை.
மாணவ, மாணவிகள் படிக்கும் காலக்கட்டத்தில் இருந்தே எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் அதில் ஒரு லட்சியம், கனவு இருக்க வேண்டும். நாம் காணும் கனவு நமக்கும், நமது ஊருக்கும், நமது நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என தனியார் பள்ளி ஆண்டு விழாவில் மணிப்பூர் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் பேசினார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் ஆண்டு விழா, தமிழ் விழா, மண்ணின் மைந்தர்களுக்கு விருது வழங்கும் விழா, பொங்கல் விழா, குடியரசு தின விழா மற்றும் சமுதாய விழா என அருப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் தலைவரும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரகுமான சி. சுப்பிரமணியம் தலைமை வகித்தார். அரவக்குறிச்சி ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவரும் மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான கிருஷ்ணகுமார் மற்றும் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மணிப்பூர் நீதிபதிக்கு பள்ளி மாணவ மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து விருது வழங்கி கௌரவித்தனர். பின்னர், விழாவில் சிறப்புரையாற்றிய மணிப்பூர் நீதிபதி, “என்னுடைய சொந்த ஊர் அரவக்குறிச்சி அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஆலம்பாளையமாகும். படிப்பு இருந்தால்தான் நீங்கள் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும். நான் படித்த காலத்தில் கரூர் மாவட்டத்தில் ஆங்கில வழிக் கல்வி என்பதே கிடையாது. கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் தான் ஆங்கில வழி கல்வி இருந்தது. அப்போது தனியார் பள்ளி என்பது ஒன்று கிடையாது. 1980 ல் இருந்து 2024 வரை தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் திறம்பட செயல்பட்டு வருகிறது.
படிக்கும் பருவத்தில் மாணவ, மாணவிகள் டாக்டர் ஆக வேண்டும், கலெக்டராக வேண்டும். பொறியாளராக வேண்டும், தொழிலில் சாதிக்க வேண்டும் என கனவு காணுங்கள். அந்த கனவு ஒரு நாள் உங்களை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும். கனவு நிச்சியமாக நினைவாகும். எந்த ஒரு செயலிலும் லட்சியம் இருக்க வேண்டும். நாம் காணும் கனவு நமக்கும் நமது ஊருக்கும், நமது நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும்” என்றார்.