MNM's important cadres quit the party: மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல்..
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கி நிர்வாகிகள் பதவி விலகினோம் என்று துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. ஆனால், எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு, நிர்வாகக்குழு உறுப்பினர்களான டாக்டர் ஆர். மகேந்திரன், எம். முருகானந்தம், மௌரியா ஐபிஎஸ் (ஓய்வு), தங்கவேல், உமாதேவி, சி.கே.குமரவேல், சேகர், சுரேஷ் அய்யர் (தேர்தல் வியூக அலுவலகம்) ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதங்களைக் கொடுத்துள்ளனர்.
"மிகப்பெரிய தோல்விக்கு பிறகும் கமலின் அணுகுமுறையில் மாற்றம் இல்லை. கமல்ஹாசன் நல்ல தலைமை பண்பு கொண்டவராக மறுபடியும் செயல்பட வேண்டும். தொண்டர்களின் உற்சாகமும், உத்வேகமும் தான் தேர்தல்களை சந்திப்பதற்கான வலிமையை எனக்கு கொடுத்தது. அரசியல் எனும் விதையை எனக்குள் விதைத்த தலைவர் கமல்ஹாசனுக்கு என் மனமார்ந்த நன்றி. தலைவர் கமல்ஹாசனுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கி நிர்வாகிகள் பதவி விலகினோம்" என்று துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.