Minister Ponmudi: “மரபை மீறிய செயல்; ஆளுநர் திருத்திக்கொள்ளவில்லை”: அமைச்சர் பொன்முடி காட்டம்
மரபை மீறியதை சுட்டிக் காட்டியும் ஆளுநர் திருத்திக்கொள்ளவில்லை அதனால் காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம் என அமைச்சர் பொன்முடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மரபை மீறியதை சுட்டிக் காட்டியும் ஆளுநர் திருத்திக்கொள்ளவில்லை அதனால் காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம் என அமைச்சர் பொன்முடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசை ஆலோசிக்காமல் மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகி உள்ளது என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனால் மாநில அரசு மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டியில், ”நாளை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், எந்தவித தகவலும் தெரிவிக்காமலும், கருத்து கேட்காமலும், உயர்கல்வி துறை அமைச்சரான எனக்கும் தெரிவிக்காமல், கௌரவ விருந்தினர் என அழைக்கிறார்கள்” எனக் கூறியிருந்தார்.
இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது அமைச்சர் பொன்முடி மரபை மீறிய ஆளுநர் செயலை சுட்டிக் காட்டியும் திருத்திக் கொள்ளப்படவில்லை, அதனால் பட்டமளிப்பு விழாவை மாநில அரசு புறக்கணிக்கிறது என அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,
”பல்ககைக்கழகப் பட்டமளிப்பு விழா ஏற்பாட்டிற்கு பல்கலைக்கழக நிர்வாகமே பொறுப்பு. பட்டம் பெறச்செல்லும் மாணவர்கள் எதிர்காலக் கடமைகளை உணர்த்தி நல்ல செய்திகளை சொல்லும் நிகழ்வாக பட்டமளிப்பு விழா உரைகள் இருக்க வேண்டும்.
அத்தகைய பட்டமளிப்பு விழா மேடைகளை அரசியல் களமாக, மாநில அரசின் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை பேசும் அரங்கமாக தற்போதைய தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம் மாற்றி வருவது பட்டமளிப்பு விழா பேச்சு மரபை மீறும் செயலாக அமைந்துள்ளது. துணை வேந்தர் தேடுதலில் மாநில அரசை எவ்வகையிலும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகின்றது ஆளுநர் அலுவலகம். வேந்தர், இணை வேந்தர் என்ற நிர்வாக ஏற்பாட்டில், விழாவிற்கு அழைக்கப்படும் வேந்தர், இணை வேந்தர் ஆகியோரே வரிசைப் படி இறுதியில் பேசுவது மரபு முறையாகும்.
வாழ்த்துரை வழங்க வரும் சிறப்பு விருந்தினரை முதலில் பேச அழைப்பதே மரபு. ஆனால் தற்போது மரபு மீறிய முறையில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரல் தயார் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு விருந்தினர் ஒன்றிய அமைச்சராக இருப்பினும் மரபு படி அவர் முதலில் பேச வேண்டும். ஆனால் அது மீறப்பட்டுள்ளது. பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரலை தயாரிக்கும் பொறுப்பு பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. ஆனால் அதிலும் ஆளுநர் அலுவலகம் தலையீடு செய்கிறது. பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள இயலாத நிலையில் இணைவேந்தரான உயர்கல்வித்துறை அமைச்சரே பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்பிக்கிறார்.
பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரலில் உள்ள குறைகளை உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் துணை வேந்தர் வழியாக அளுநர் அலுவலகத்திற்கு சுட்டிக் காட்டியும் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படாததால், இப்பட்டமளிப்பு விழாவினை புறக்கணிக்கிறோம்” இவ்வாறு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.