High Court order: பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்சினை? - தற்காலிக நியமனத்திற்கு இடைக்காலத் தடை
தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கு:
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. ஆனால் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள். இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப திட்டமிட்டு, அரசு கடந்த 23ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தகுதியற்றவர்களை நியமிக்க வாய்ப்பு:
தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான நபர்களை பணியில் நியமித்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இடைக்கால தடை உத்தரவு:
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், அரசுத் தரப்பில் ஆசிரியர்கள் தற்காலிகமாகவே நியமிக்கப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, " நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்சினை? அரசின் இந்த பதில் திருப்திகரமாக இல்லை. ஆகவே, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பான அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில் மற்றொரு வழக்கை விசாரித்த நீதிமன்றம்-
சட்டத்திற்கு புறம்பாக காவல்துறையினர் தன்னை காவலில் அழைத்து விசாரித்ததற்கு ஆதாரமான சங்கரன்கோவில் பேருந்து நிலைய கடைகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பாதுகாக்க உத்தரவிடக் கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வழக்கு வந்தது.
வழக்கு:
தென்காசியை சேர்ந்த மகாலட்சுமி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "காளீஸ்வரி பைனான்ஸ் மூலமாக பழைய காரை வாங்கி பதிவு செய்தேன். எனது நண்பர் கார்த்திக் எனது காரை கடனாகப் பெற்றுச் சென்று அன்றே திரும்ப கொடுத்தார். பின்னர் எனது அனுமதி இல்லாமல் காரை எடுத்துச் சென்றார். ஆனால் கார்த்திக், காவல் ஆய்வாளர் செல்வத்திடம் என் மீது புகார் அளித்ததன் அடிப்படையில், காவல்துறை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக என்னை சட்டத்திற்கு புறம்பாக விசாரணைக்கு அழைத்து சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகில் வைத்து துன்புறுத்தி, காரை ஒப்படைக்கும்படி கூறினர். இந்த சம்பவம் அனைத்தும் சங்கரன்கோவில் பேருந்து நிலைய பகுதியில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா கிளினிக் மற்றும் அருகில் உள்ள டீ கடை உள்ளிட்ட கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும். இதுகுறித்து நடவடிக்கை கோரி காவல்துறை உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே வெங்கடேஸ்வரா கிளினிக் மற்றும் அதனை சுற்றியுள்ள டீக்கடை ஆகிய கடைகளில் ஏப்ரல் 6,7 ஆகிய 2 நாட்களில் பதிவான சிசிடிவி பதிவுகளை பாதுகாத்து வைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
சிசிடிவி காட்சிகளைக் பாதுகாக்க உத்தரவு:
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம்," இந்த வழக்கிற்கு சிசிடிவி காட்சிகள் முக்கியமாக கருதப்படுகிறது. எனவே தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விருதுநகர் மற்றும் சங்கரன்கோவில் பகுதி காவல்துறை ஆய்வாளர்கள் சிசிடிவி காட்சிகளை பாதுகாத்து வைக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.