"ஒரு சாதியை மட்டும் தூக்கி பிடிக்கிறாங்க" களத்தில் இறங்கிய வழக்கறிஞர்கள்!
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்ற வலியுறுத்தி அனைத்து சங்க வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவரை மட்டுமே நீதிபதிகளாக நியமிப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வரும் நிலையில், நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்ற வலியுறுத்தி அனைத்து சங்க வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒரு சாதியை மட்டும் உயர்த்தி பிடிப்பதற்கான நோக்கம் என்ன?
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பே, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை பரிந்துரை செய்து வருகிறது. அந்த பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு நீதிபதிகளை நியமிக்கலாம். ஆனால், சில சமயங்களில், கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்காமலும் இருந்துள்ளது.
நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. குறிப்பாக, கொலீஜியத்தில் உள்ள மூத்த நீதிபதிகள், தங்கள் உறவினர்களையே நீதிபதிகளாக நியமிப்பதாக தொடர் புகார் எழுந்து வருகிறது. அதோடு, குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவரை மட்டுமே நீதிபதிகளாக நியமிப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
களத்தில் இறங்கிய வழக்கறிஞர்கள்:
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்ற வலியுறுத்தி அனைத்து சங்க வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு வழக்கறிஞர் சங்கத்தினர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர்கள், "உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பணி நியமனத்தில் சமூக நிதி பின்பற்றாமல் இருப்பதற்கு காரணம் என்ன? ஒரு சாதியை மட்டும் உயர்த்தி பிடிப்பதற்கான நோக்கம் என்ன?
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு தகுதி இல்லையா?" என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய அவர்கள், "எங்களுடைய கோரிக்கையை ஏற்று அனைத்து சமூகத்தில் உள்ளவர்களுக்கும் சமமாக மதித்து அவர்களுக்கு உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதிவி வழங்க வேண்டும். மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் பணி நியமனத்தில் சமூக நீதியை பின்பற்ற வலியுறுத்தி ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டது வரவேற்கத்தக்கது.
இதே நிலை தொடர்ந்தால் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் இணைந்து போராடுவோம்" என தெரிவித்தனர். இதில் வழக்கறிஞர்கள் பால் கனகராஜ், பார்வேந்தன், பாரதி உள்ளிட்ட பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர்கள் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட வழக்கறிஞர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.





















