Liquor Prohibition Amendment Bill: பூரண மதுவிலக்கிற்கான ஆசை இருந்தும், சூழல் இல்லை - கடைகளை குறைத்தும் பயனில்லை - அமைச்சர் முத்துசாமி
CM Stalin: தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கிற்கான சூழல் இல்லை என, மதுவிலக்கு அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
CM Stalin: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை, தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார். அதன்படி, இனி தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா:
மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் அமைச்சர் தாக்கல் செய்தார். அதில் கள்ளச்சாராய விற்பனைக்கு தற்போது வழங்கப்படும் தண்டனை போதுமானதாக இல்லாததால் திருத்தம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை, பதுக்கல் என அனைத்துவிதமான குற்றங்களையும் தடுக்கும் வகையில் சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராய விற்பனை, தயாரிப்புக்கு வழங்கப்படும் தண்டனைகள் போதுமானததாக இல்லாததால் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மதுவிலக்கு சூழல் இல்லை - அமைச்சர் முத்துசாமி:
மசோதாவை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் முத்துசாமி, “முழு மதுவிலக்கை அமல்படுத்த அரசுக்கு விருப்பம் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அதற்கான சூழல் தற்போது இல்லை. படிப்படியாக கடைகளை குறைத்தும், குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஒரு கடையை மூடினாலும் மற்ற கடைகளுக்குச் சென்று வாங்கு குடிக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
தண்டனை விவரங்கள்:
கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய மசோதாவின்படி, கள்ளச்சாராய குற்றங்களான பதுக்கல் மற்றும் விற்பனையில் பயன்படுத்தப்படும் அனத்து அசையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு, ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையுடன், 10 லட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஜாமின் முறிவினை நிறைவேற்ற நிர்வாகத்துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்க சட்டதிருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அன்றே சொன்ன முதலமைச்சர்:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் முக.ஸ்டாலின், "உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்களை காய்ச்சுதல், விற்பனை செய்வது போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும், கடுமையாகவும் இல்லை. இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கும் வகையில், தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937-ல் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதா, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்" என தெரிவித்திருந்தார். இந்நிலையில், தண்டனையை கடுமையாக்குதல் மற்றும் அபராத தொகையை உயர்த்துவதற்கு வழிவகை செய்யும் புதிய சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி விவகாரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாரயம் அருந்தியதில், நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், சிகிச்சை பலனின்றி 60-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளன. இன்னும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்கள் குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் 10 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது. அதேநேரம், அரசின் நிர்வாக திறமையின்மை காரணமாகவே கள்ளச்சாராய மரணங்கள் தொடர்ந்து நிகழ்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனால், இதனால் சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக கடும் அமளியில் ஈடுபட்டதோடு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் கோரிக்கை வைத்தன. இந்நிலையில் தான், கள்ளச்சாராயம் தொடர்பான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.