Minister Regupathy: ஜாபர் சாதிக் குற்றத்துக்கு பாஜக, அதிமுகவே காரணம்.. அமைச்சர் ரகுபதி பதிலடி
டெல்லியில் நடந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் ஜெய்ப்பூரில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார்.
தேர்தல் களத்தில் திமுகவை களங்கப்படுத்த பாஜக முயற்சி செய்வதாக அமைச்சர் ரகுபதி கடுமையான விமர்சித்துள்ளார்.
டெல்லியில் நடந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடு செய்திருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அரசியலில் முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக வாக்கு மூலம் கொடுத்ததாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசை அதிமுக, பாஜக கட்சிகள் மாறி மாறி விமர்சித்து வருகின்றன. தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாகி விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “தேர்தல் களத்தில் திமுகவை களங்கப்படுத்த பாஜக முயற்சிக்கிறது.அதற்கு அதிமுகவும் துணைபோகிறது. ஏற்கனவே வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை இறக்கி விட்ட பாஜக தற்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவை ஏவிவிட்டுள்ளது” எனவும் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பதவி ஏற்றது முதல் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதைப் பொருள் வழக்கு விசாரணை முடிவடையும் முன்பே டெல்லியில் தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரி ஒருவர் பேட்டி அளிக்கிறார். அந்த அதிகாரி பேட்டியை வைத்து அரசியல் செய்யலாம் என பாஜக முயற்சி செய்கிறது.
மத்திய அரசின் புலன் விசாரணை அமைப்புகள் பாஜகவை எப்படியாவது தாங்கிப் பிடிக்கலாம் என நினைக்கின்றது. ஜாபர் சாதிக்கை தேடப்படும் குற்றவாளியாக பிப்ரவரி 16ல் அறிவித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு 21 ஆம் தேதி திரைப்பட விழாவில் பங்கேற்றவரை கைது செய்யவில்லை. ஜாபர் சாதிக் வழக்கில் திமுகவை குறை சொல்லும் அதிமுக, குட்கா வழக்கில் சிக்கிய விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ததா?
ஜாபர் சாதிக் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்காமல் திமுகவுக்கு களங்கம் கற்பிக்க முயற்சி நடக்கிறது. ஜாபர் சாதிக் மீது 2013ல் அதிமுக ஆட்சியில் போதைப்பொருள் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவருக்காக அதிமுக ஆட்சியில் பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜராகியுள்ளார்.ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தியதாக கூறப்படும் இடம் டெல்லி தானே தவிர தமிழ்நாடு அல்ல. இந்த விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிராக பாஜக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்கவே போதைப் பொருள் மாநிலம் போல சித்தரிக்க பாஜக முயற்சிக்கிறது.
நாட்டிலேயே அதிகமாக போதைப் பொருள் கடத்தப்படுவது பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தில் தான். ஜாபர் சாதிக்கிற்கும் திமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை. போதைப் பொருள் தொடர்பாக புகார் எழுந்தவுடன் அவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டோம். ஜாபர் சாதிக் மீதான வழக்கை ஒழுங்காக அதிமுக ஆட்சியில் நடத்தாததால் தற்போது மீண்டும் வழக்கில் சிக்கியுள்ளார். அதிமுக ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் சிறையில் இருந்திருப்பார். 2013ல் ஜாபர் சாதிக் விடுதலையாக அதிமுகவும் பாஜகவும் காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தான். ஜாபர் சாதிக் செய்த குற்றங்கள் எதுவும் தமிழ்நாட்டில் நடக்கவில்லை. வெளிமாநிலங்களில் தான் நடந்தது” என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.