KV Anand Death: பெசன்ட் நகர் மயானம் புறப்பட்டது கே.வி.ஆனந்த் உடல்: கொரோனா உறுதி என்பதால் உடனே அடக்கம்
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டது உறுதிபடுத்தப்பட்டதால் மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் உடல், மருத்துவமனையில் இருந்து நேரடியாக பெசன்ட் நகர் மையானத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
கடந்த 24ம் தேதி உடல் சோர்வு, தொண்டை வலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனைக்குச் சென்ற இயக்குனர் கே.வி.ஆனந்திற்கு சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரது மனைவி மற்றும் 2 மகள்களுக்கு தொற்று உறுதியாகி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். பின்னர் அவர்கள் அனைவரும் குணமடைந்து விட்டனர். இருப்பினும் கே.வி.ஆனந்த் சிகிச்சையில் இருந்துள்ளார். நேற்று குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சையில் இருந்த கே.வி.ஆனந்தை பார்த்துவிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் தான் அவருக்கு இன்று அதிகாலை திடீரென உடல் நிலை மோசமாகி அதிகாலை 3 மணிக்கு உயிரிழந்துள்ளார்.
ஆனால் அதற்கு முன் அவர் இறப்பு பற்றி பல தகவல்கள் வெளிவரத்துவங்கின. கே.வி.ஆனந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரது சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. குடும்பத்தாரின் பாதுகாப்பு கருதி மருத்துவமனையில் இருந்து சென்னை பெசன்ட் நகரில் உள்ள மயானத்திற்கு அவரது உடல் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு கொரோனா விதிகளின் படி மாநகராட்சி பணியாளர்கள் உடலை நல்லடக்கம் செய்ய உள்ளனர்.