(Source: ECI/ABP News/ABP Majha)
Kuwait Fire Death: குவைத் தீ விபத்தில் தமிழர்கள் 7 பேர் உயிரிழப்பு: 8 பேர் நிலை என்ன?
குவைத் மங்காப் நகரில் உள்ள கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 7 தமிழர்கள் உயிரிழந்ததாகவும், 8 பேரின் நிலை குறித்து தெரியவில்லை என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குவைத்தில் உள்ள தூதரக தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், இதுவரை 7 தமிழர்கள் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.
குவைத் கட்டட தீ விபத்து:
குவைத் நாட்டின் மங்காப் நகரில் உள்ள கட்டடத்தில் நேற்றைய தினத்தின் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. சமையலறையில் முதலில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தீயானது பரவ ஆரம்பித்தது.
தீயின் தீவிரத்தை உணர்ந்த பலர் , கட்டடத்தின் மாடியிலிருந்து கீழே குதித்தாகவும் கூறப்படுகிறது. சிலர் கட்டடத்திற்குள் மாட்டிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கட்டடத்தில் சுமார் 195 பேர் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் ஒரே நிறுவனத்துக்காக வேலை பார்ப்பவர்கள் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் ஏற்பட்ட புகையால், மூச்சுவிட முடியாமல் பலர் இறந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 49 பேர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழர்கள் 7 பேர் உயிரிழப்பு:
இந்த விபத்தில் 7 தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கின்றன.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராமு கருப்பணன், சின்னத்துரை, வீராசாமி மாரியப்பன்
தஞ்சையைச் சேர்ந்த ரிச்சர்ட் ராய்,
திருச்சியைச் சேர்ந்த ராஜூ எபினேசர்,
செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரீப்
சென்னையைச் சேர்ந்த சிவசங்கர் ஆகிய 7 பேர் உயிரிழந்துள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கின்றன.
மேலும், அந்த கட்டடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 பேர் வசித்து வந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. 10 பேர் இரவுநேர வேலைக்குச் சென்றதால், பாதிப்பில் இருந்து தப்பினர். இந்நிலையில் மீதமுள்ள 15 பேரில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவித்த நிலையில், மீதமுள்ள 8 பேரின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.
தமிழ்நாடு அரசு அறிவிப்பு:
விபத்தில், தமிழர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பின், விவரங்களை பெற்று உதவுமாறு அயலகத் தமிழர் நலத்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிற்குள் உள்ளவர்கள் +91 18003093793 , வெளிநாட்டில் உள்ளவர்கள் +91 8069009900, +91 8069009901 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்திய அரசு உதவி எண்கள் அறிவிப்பு:
Indian Embassy helpline number (+965-65505246) may be reached over by phone, whatsapp as well as whatsapp messages. https://t.co/MJAsPFGSuu
— India in Kuwait (@indembkwt) June 12, 2024
இந்நிலையில் குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகம், உதவி எண்களை அறிவித்துள்ளது. குவைத் நாட்டில் உள்ள நபர்கள், இந்திய அரசை தொடர்பு கொள்ள ( (+965-65505246) ) இந்த எண்ணை அழைக்கவும். தொலைபேசி வாயிலாகவும் வாட்சப் செயலி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் இணை அமைச்சர்:
இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் குவைத் சென்றார். காயமடைந்த 7 இந்தியர்கள் குவைத்தில் உள்ள முபாரக் அல் கபீர் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அனுமதிக்கப்பட்ட இந்தியர்களிடம், இந்திய அரசு அனைத்து ஆதரவையும் வழங்கும் என உறுதியளித்தார். மேலும், இந்தியர்களைச் சிறப்பாக கவனித்து வரும் மருத்துவமனை அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களையும் பாராட்டினார்.
தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவிப்பு:
இந்நிலையில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண உதவியும், காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண உதவி - காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு!
— TN DIPR (@TNDIPRNEWS) June 13, 2024
(2/2)#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @GingeeMasthan